ETV Bharat / state

பிப்.18-இல் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 10:34 AM IST

nellai periyar bus stand opening
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம்

Nellai Periyar Bus Stand: நெல்லையில் சுமார் ரூ.79 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சந்திப்பு பேருந்து நிலையம், வரும் பிப்.18ஆம் தேதி பயன்பாட்டிற்கு வருவதால் நெல்லை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம்

திருநெல்வேலி: தாமிரபரணி ஆறு, இருட்டுக்கடை அல்வா, பத்தமடை பாய் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நெல்லை மாவட்டத்தின் பிரதான தலைநகர் பேருந்து நிலையம், நெல்லை சந்திப்பு பகுதியில் பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்தது. பின்னர், இட நெருக்கடி காரணமாக பாளையங்கோட்டை அருகே வேய்ந்தான் குளத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சந்திப்பில் இயங்கி வந்த பேருந்து நிலையம், நெல்லையின் பழைய பேருந்து நிலையமாக 15 ஆண்டுகளாக செயல்பட்டது. நெல்லை மக்கள் இப்பேருந்து நிலையத்தை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் என்று அழைப்பர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு நெல்லை பழைய பேருந்து நிலையம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர், அங்கு மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கியது.

ஆனால், பேருந்து நிலையம் கட்டுமானப் பணியின்போது, பூமிக்கு அடியில் கிடைத்த ஆற்று மணல் சட்ட விரோதமாக விற்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பெரும் சர்ச்சையானது. எனவே, நீதிமன்ற வழக்கு மற்றும் பல்வேறு காரணங்களால் நெல்லை பழைய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி தள்ளிப்போனது. இதனால், சந்திப்பு பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் என அனைவரும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

6 ஆண்டு கால துயரத்திற்கு விடிவு காலம்: குறிப்பாக, பழைய பேருந்து நிலையத்தில் இருந்துதான் டவுன், பேட்டை, சுத்தமல்லி, சீவலப்பேரி, தச்சநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மேலும், வணிகம் மற்றும் கல்வி ரீதியாக சந்திப்பு டவுன் பகுதிகளுக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இங்கு வந்து செல்வர். அதேபோல், நெல்லையிலிருந்து ஆலங்குளம் வழியாக தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் சந்திப்பு பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்துதான் செல்லும்.

எனவே, கடந்த 6 ஆண்டுகளாக பேருந்து நிலையம் செயல்படாததால், பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்ததுள்ளது.

பேருந்து நிலையத்தின் வசதிகள்: சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பில், 4 மாடி கட்டடங்களுடன் பேருந்து முனையம் மற்றும் பூமிக்கடியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்பட பல்வேறு நவீன வசதிகளின் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில், நம் நெல்லை நம் பெருமை என்ற வாசகம் எழுதப்பட்டு, அலங்காரச் செடிகளுடன் கூடிய சிறிய அளவிலான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பார்ப்போரின் கண்களைக் கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டு, பேருந்து நிலையம் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

அடுத்தடுத்து வந்த சோதனை: பல சோதனைகளைக் கடந்து, கடந்த ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது சந்திப்பு பேருந்து நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதன் காரணமாக, நெல்லை பேருந்து நிலையம் திறப்பது மேலும் தள்ளிப் போனது.

அமைச்சர் உதயநிதி தலைமையில் திறப்பு: இந்த நிலையில், வரும் 18ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருமண நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நெல்லை வருகிறார். அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். எனவே, இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.

தற்போது வரும் பிப்.18ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். எனவே பேருந்து நிலையத்தில், இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆறு ஆண்டுகளாக முடங்கி கிடந்த நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் மீண்டும் பயன்பாட்டிற்கு வர இருப்பதால் பொதுமக்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: "எங்களோட சேர்ந்து குரல் கொடுங்க" எடப்பாடிக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.