ETV Bharat / state

MyV3Ads நிறுவனர் சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு! - ஆடியோ வைரல் - MyV3Ads Scam issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 8:24 AM IST

Ashok Srinithi murder threat
MyV3Ads நிறுவனர் சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு(Photo Credits To Reporter Prasanna)

Ashok Srinithi murder threat: MyV3Ads நிறுவனர் சக்தி ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பீளமேடு காவல் நிலையத்தில் கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் அசோக் ஸ்ரீநிதி சார்பில் பாமகவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், "கோவையில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைவி3 நிறுவனம் (MyV3 Ads) விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது.

மேலும், அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்தவர்களிடம் இருந்து தற்போதுவரை சுமார் 2,000 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட மைவி3 நிறுவனம் வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு மைவி3 மோசடிக்கு எதிராக புகார் கொடுத்தேன். ஆகவே, இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் கிடைக்க வேண்டி, அந்த நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 27ஆம் தேதி அசோக் ஸ்ரீநிதியின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மைவி3 நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்றும் அசோக் ஸ்ரீநிதியை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொலை மிரட்டலுக்குப் பயன்படுத்தப் பட்ட செல்போன் எண், மைவி3 நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உறுதி ஆகியுள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சக்தி ஆனந்த் மற்றும் விஜயராகவன் அகியோரின் அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் இந்த கொலை மிரட்டல் தனக்கு வந்துள்ளது என்றும்; ஆகவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, அசோக் ஸ்ரீநிதி அளித்துள்ள இந்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மைவி3 உரிமையாளர்கள் சக்தி ஆனந்த், விஜயராகவன் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தவர் உட்பட மொத்தமாக 3 பேர் மீது போலீசார் கொலைமிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மிரட்டல் விடுத்த ஆடியோ மற்றும் அதற்குப் பயன்படுத்திய செல்போன் எண் ஆகியவற்றை, கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தன்னுடைய 'X' வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், தற்போது இந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: “இப்படி ஒரு விழாவா..” துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விளக்குமாறு அடி திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.