ETV Bharat / state

வேட்பாளரே இல்லாத நெல்லையில் திமுக தலைவரின் பொதுக்கூட்டம்.. நெல்லை தொகுதி திமுக வசம் செல்கிறதா? நொடிக்கு நொடி பரபரப்பு! - m k stalin campaign in tirunelveli

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 10:37 AM IST

Updated : Mar 25, 2024, 10:49 AM IST

ஸ்டாலின்
ஸ்டாலின்

Mk stalin tirunelveli visit: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் திருநெல்வேலியில் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பிராச்சாரக் கூட்டத்தை மேற்கொள்ள உள்ளார்.

திருநெல்வேலி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது.

திமுகவில் காங்கிரஸ், விசிக, மதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் திமுக 21 தொகுதிகளிலும், 19 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் ஆரம்பித்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், இன்று மாலை 6 மணிக்கு, திருநெல்வேலி நாங்குநேரியில் நடைபெற உள்ள பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தற்போது வரை திருநெல்வேலி தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.

இதனால், கூட்டணி கட்சியான திமுக நிர்வாகிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் முதலமைச்சர் இன்று திருநெல்வேலியில் பிரச்சாரத்தை மேற்கொள்வது நிர்வாகிகள் மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர் அறிவிப்பு தாமதத்திற்கான பின்னணி என்ன?: திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக தென்காசியை சேர்ந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மற்றும் அவரது மகன் அசோக், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ், மற்றொரு நிர்வாகி ராஜேஷ் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சீட் கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏ வாக இருப்பவர் குடும்பத்திற்கு மீண்டும் எம்பி தேர்தலில் வாய்ப்பு தர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கடைசி கட்டமாக காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பால்ராஜுக்கு வாய்ப்பு தரப்படலாம் என என எதிர்பார்ப்பு நிலவுகிறது.மேலும், செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி கிடைக்க ரூபி மனோகரன் பல்வேறு வகைகளில் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு சீட் வழங்க செல்வப்பெருந்தகை முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கிட்டத்தட்ட வேட்பாளர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 100 காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியின் தலைமைக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்த வேட்பாளர்கள் பட்டியலை வழங்கும்படி மாநில தலைமைக்கு, தலைமை உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் நிலவி வருகிறது.

தேர்தல் பிரச்சாரம்: இதனால், திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். நேற்று முன் தினம் திமுக மாவட்ட செயலாளர் தலைமையில், திமுகவினர் வீதி வீதியாக சென்று பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், வேட்பாளர் யார் என்று தெரியாததால், மக்களிடம் ஓட்டு கேட்பதில் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு வழியில்லாமல் காங்கிரஸ் சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டு சமாளித்ததாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் பிரச்சாரம்: இந்நிலையில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலி நாங்குநேரியில் நடக்கும் தேர்தல் பொதுககூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதில் அவர் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் தற்போது வரை காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் திமுகவுக்கும் பெரும நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் பேச்சுவார்த்தை: திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, நேற்று இரவு அல்லது இன்று காலைக்குள் வேட்பாளர் அறிவிக்காவிட்டால், திமுக சார்பில் திருநெல்வேலியில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் தலைமைக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி தேர்தல் களம் இன்று நாள் முழுவதும் நொடிக்கு நொடி பரபரப்பாக இயங்கும்.

இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் திமுக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளரா அல்லது திமுக வேட்பாளரா என்பதை இரு கட்சி நிர்வாகிகளும் ஆர்வமுடன் உற்று நோக்கி வருகின்றனர். கல்யாணம் தேதி குறித்து விட்டோம் மாப்ள தான் இன்னும் கிடைக்கவில்லலை என்ற கதையாக திருநெல்வேலியின் திமுக நிர்வாகிகளின் நிலை உள்ளது.

இதையும் படிங்க: 'திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் தேர்தலில் போட்டி..திமுகவின் ஊழல் பட்டியல் ரெடி' - ஈபிஎஸ் ஆவேசம் - Edappadi K Palaniswami

Last Updated :Mar 25, 2024, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.