ETV Bharat / state

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 6:06 PM IST

Updated : Feb 25, 2024, 7:42 PM IST

Industrial Minister TRB Rajaa
அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

Industrial Minister TRB Rajaa: தூத்துக்குடியில் தனியார் மின்சார வாகனங்கள் உற்பத்தித் தொழிற்சாலை (VinFast Auto) அமைக்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து குவிந்துள்ளதால் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

தூத்துக்குடி: வியட்நாமின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ (VinFast Auto) இந்தியாவில் அதன் முதல் உற்பத்தி ஆலைக்கான தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இந்தத் தொழிற்சாலையை அந்நிறுவனம் 16ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமைக்கிறது. இந்தத் தொழிற்சாலையானது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில்லாநத்தம் கிராமத்தில் அமைய உள்ளது. தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் இந்தத் தொழிற்சாலை திட்டத்திற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.25) அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது, "திராவிட நாயகன் முதலமைச்சரின் நல்லாட்சியில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்கான பார்வையில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைக்கோடி மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அவரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, இன்று (பிப்.25) தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய திட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மொத்தமாக 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீட்டில் முதல் கட்டமாக 4ஆயிரம் கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏறத்தாழ 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த நிறுவனத்தை பொறுத்தமட்டில் இன்னும் 15 மாதத்திற்குள் இந்நிறுவனத்தின் ஆலை உருவாக்கப்படும்.

மேலும், இங்கே வாகனங்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் இந்த ஆலை துவங்கும் என நம்புகிறோம். அதேபோல தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியில் மிகப்பெரிய வெற்றியைக் கண்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட நிதி குறித்து, இத்தனை லட்சம் கோடி, இவ்வளவு வேலை வாய்ப்பு எப்போது நடக்கும் என்று கேட்டார்கள்.

ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்ட வின்பாஸ்ட் நிறுவனம் பிப்ரவரி மாதம் இன்று அதன் வேலையைத் தொடங்கி இருக்கிறது. இதுவே தமிழ்நாடு முதலமைச்சரின் செயல் திறனுக்கான மிகப்பெரிய ஒரு அத்தாட்சியாக இந்தியாவில் இருக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த முதலீடு மட்டுமல்ல இதனால் வரப்போகும் ஆட்டோ காம்போனென்ஸ் மிகப்பெரிய அளவில் இப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவும். ஆட்டோ மொபைல் கிளஷர் தூத்துக்குடியில் உருவாகப் போகிறது. இதுபோன்று பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வர இருக்கின்றன. கடந்த ஆட்சியினரால் முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட நாங்குநேரி திட்டம் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

அந்தத் திட்டமும் மீண்டும் நிச்சயமாக உயிர்ப்பிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். மேலும், நாங்குநேரியை பொறுத்தமட்டில் ஒரு சில சின்ன சட்டச் சிக்கல்கள் இருக்கிறது. அதனால் நாங்கள் அதனைச் சாமர்த்தியமாகக் கையாண்டு வருகிறோம். மிக விரைவில் நல்ல செய்தி வரும்.

ஒட்டுமொத்தமாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியில் ஏறத்தாழ 10 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் தமிழகத்தில் குவிந்து இருக்கின்றன. இதனால் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். இது வெறும் துவக்கம் தான். தற்போது தேர்தல் வர இருக்கிறதால் வேலையெல்லாம் தொய்வாக நடைபெறுகிறது. தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பணிகளின் வேகம் சூடுபிடிக்கும்.

மேலும், தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 408 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ஆலையில் முதல் ஐந்து ஆண்டுகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்பட்டு ஆண்டுக்குச் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை மூலமாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டம் தென் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிக்கும்.

இந்த தொடக்க நிகழ்ச்சியில், மாநில தொழில்துறைச் செயலர் வி.அருண் ராய், வின் பாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாம் சான் சாவ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை.. வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் ஸ்டாலின் பேச்சு!

Last Updated :Feb 25, 2024, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.