ETV Bharat / state

75வது குடியரசு தினம்: வேட்டி சட்டையில் தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 2:00 PM IST

Updated : Jan 26, 2024, 2:46 PM IST

Republic Day Celebration
75வது குடியரசு தினம்

Republic Day Celebration: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை: 75ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொடியேற்றி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடந்த குடியரசு தின விழாவில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா தேசிய கொடி ஏற்றி வைத்து, பின்னர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌவுரவித்தார். மேலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் மோப்ப நாய்கள் பல்வேறு சாகசங்களை செய்து அசத்தின. அப்போது பயிற்சி பெற்ற நாய் தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து வழங்கிய நிகழ்வு பார்வையாளர்களை ஆச்சர்ய படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். மேலும் நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சட்ட துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தூர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நடந்த குடியரசு தின விழாவில், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: ரூ.9,482 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு ரயில்வே: குடியரசு தின விழா உரையில ஆர்.என்.சிங் பெருமிதம்!

Last Updated :Jan 26, 2024, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.