ETV Bharat / state

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய விவகாரம்: 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 1:03 PM IST

Dharmapuram Adheenam
தருமபுரம் ஆதீனம் விவகாரம்

Dharmapuram Adheenam: தருமபுரம் ஆதீனம் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக மிரட்டல் விடுத்த வழக்கில் சிறையில் உள்ள மூவரின் ஜாமீன் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாகக் கூறி, சிலர் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனத் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், வினோத் ஆகிய 4 பேரையும் கடந்த 28ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக கிழக்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் செய்யூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி, திமுக பிரமுகர் விஜயகுமாருக்கும், இந்த வழக்கிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை எனக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

தற்போது தலைமறைவாக உள்ள குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குடியரசு, ஸ்ரீநிவாஸ் மற்றும் வினோத் ஆகிய 3 பேரும், தனித்தனியாக அவர்களது வழக்கறிஞர் மூலம் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த ஜாமீன் மனுக்கள் மீதான வழக்கு விசாரணை நேற்று (மார்ச் 5) மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், 3 பேரையும் ஜாமீனில் வெளியே அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து, மாவட்ட அமர்வு நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் விவகாரம்; "திமுக பிரமுகருக்கு இவ்வழக்கில் சம்பந்தம் இல்லை" - அரசுக்கு ஆதீனம் நன்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.