ETV Bharat / state

தருமபுரம் ஆதீனம் விவகாரம்; "திமுக பிரமுகருக்கு இவ்வழக்கில் சம்பந்தம் இல்லை" - அரசுக்கு ஆதீனம் நன்றி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 5:51 PM IST

Dharmapuram Adheenam issue
தருமபுரம் ஆதீனம் விவகாரம்

Dharmapuram Adheenam: தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவர், திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் திமுக விஜயகுமாருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஆதினத்தின் சகோதரர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதியாக 27வது குருமாக சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளார். இந்த நிலையில், அவர் மீது அவதூறு பரப்பும் விதமாக, ஆபாச ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாகக் கூறி, பணம் கேட்டும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்.25ஆம் தேதி மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தருமபுரம் ஆதீன கர்த்தரின் சகோதரர் விருத்தகிரி, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், தருமபுரம் ஆதினத்தின் ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், பணம் வேண்டும் என மிரட்டிய பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், செம்பனார்கோயில் கலைமகள் கல்விக் குழுமத்தின் தாளாளர் குடியரசு, திமுக பிரமுகர் விஜயகுமார் உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, குடியரசு உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி, திமுக பிரமுகர் விஜயகுமாருக்கும், இந்த வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இன்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருத்தகிரி அனுப்பியுள்ள கடிதத்தில், “நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் பெயரில், காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி. இந்த வழக்கில், திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், இந்த விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தவர்.

என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நபர்களிடமிருந்து விஜயகுமார் பேசி, பிரச்னையை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி எடுத்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. அந்த நபர் ரவுடிகளாக இருப்பதால், காவல்துறையின் உதவியை நாடுவது நல்லது என திருக்கடையூர் விஜயகுமார் அறிவுரையின் பேரிலும், ஆலோசனையின் பெயரிலேதான், நான் காவல்துறையின் உதவியை நாடினேன். எங்களுக்கு உதவி செய்ததைத் தவிர விஜயகுமாருக்கு இந்த வழக்கில் எந்தவித தொடர்பும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் துரித நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் தருமபுரம் ஆதீனம் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. திருவாவளவன் கூறுவது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.