ETV Bharat / state

"மோடி நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்துகிறார்" - மன்சூர் அலிகான்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 10:59 PM IST

Updated : Mar 9, 2024, 11:05 AM IST

Etv Bharat
Etv Bharat

Mansoor Ali Khan: வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான், மோடி மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார், தற்போது தேர்தல் நடப்பது போல் ஒரு நாடகம் நடக்கிறது எனக் கூறியுள்ளார்.

மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பு

வேலூர்: மக்களவைத் தேர்தலையொட்டி 'இந்திய ஜனநாயகப் புலிகள்' கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான மன்சூர் அலிகான் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் வேலூரில் உள்ள கோட்டையிலிருந்து வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "மக்களவைத் தேர்தலில் வேறு எந்த கட்சியும் என்னைக் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அதனால் தனித்துப் போட்டியிடுகிறேன்.

அண்ணா காலத்தோடு திமுக இறந்து விட்டது. இப்போது உள்ளது ஏமாற்றும் திமுக. போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. அவ்வாறு போதைப் பொருள் விற்பவர்களின் தலையை நடுரோட்டில் வெட்டினால் தான் இதுபோல விற்க மாட்டார்கள்.

தற்போது, பள்ளி மாணவர்கள் கூட போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஒரே ஆணையில் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க வேண்டும். தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று விடுகின்றனர். வேலைவாய்ப்பு எங்கும் இல்லை, அரசியலில் விஐபி கலாச்சாரத்தைத் தவிர்க்கத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் சைரன் வைத்த வாகனத்தில் போகக்கூடாது.

இருசக்கர வாகனங்களில் தான் போக வேண்டும். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்குக் காரணம் ஒன்றும் இல்லை. ஏற்கனவே ஆரணி தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்திருந்தேன். தற்போது அங்கு பொதுச் சேவையில் ஈடுபடும் பிரபலமான நபர் ஒருவர் போட்டியிட உள்ளதால், தற்போது வேலூரில் போட்டியிடுகிறேன். ஆரணி, வேலூர், திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் ஆகிய ஐந்து தொகுதிகளில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி போட்டியிடுகிறது. காலம் குறுகியதாக இருப்பதால் வேலூரில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம்.

தேர்தல் பிரச்சாரத்திற்குச் சினிமா பிரபலங்களை அழைத்து வரும் திட்டம் ஏதுமில்லை. அப்படி ஒரு கட்டமைப்பு ஏதும் கட்சியில் ஏற்படுத்தவில்லை. தேர்தல் வாக்குறுதிகளாக காட்டன் சூதாட்டத்தை (லாட்டரி விற்பனை) முதலில் ஒழிப்பேன், பாலாற்றில் தண்ணீர் கொண்டு வருவேன், இயற்கையை மேம்படுத்துவேன். கோட்டையில் உள்ளே அமைந்துள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த நடவடிக்கை எடுப்பேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்த்துக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. நீதிபதியும் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். மோடி மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

தற்போது தேர்தல் நடப்பது போல் ஒரு நாடகம் நடக்கிறது. மக்கள் என்னை நம்பி வாக்களித்தால் கண்டிப்பாக விடமாட்டேன், சாட்டையைச் சுழற்றுவேன்" என்றார். இதனை தொடர்ந்து, மன்சூர் அலிகான் அணைக்கட்டு பேரவை தொகுதி, ஊசூர் பகுதியில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: வேலூர் பல்கலைக்கழக புதிய கட்டடத்தில் விரிசல்.. சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு அதிருப்தி!

Last Updated :Mar 9, 2024, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.