ETV Bharat / state

“வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது” - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 6:53 PM IST

mhc-adjourned-tomorrow-former-minister-senthil-balaji-bail-petition
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு.. நாளை (பிப்.15) ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்..

Madras High Court: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைய (பிப்.15) தினத்துக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், சாட்சிகளைக் கலைக்க முடியாது என்பதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் என்பதாலும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாலும், அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப்.14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும்.

அமலாக்கத் துறையின் மொத்த வழக்கும், சோதனையின்போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின்போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன” என்றார்.

மேலும், “பறிமுதலுக்குப் பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்குப் பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர், அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது? ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில், விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா? பறிமுதலுக்குப் பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக” மூத்த வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.

கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்கத் துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. பணத்தை வசூலித்து, உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாக கூறுகின்றனர். ஆனால், சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை” என வாதிட்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது எனவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில், 64 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் 58 லட்சம் எடுக்கப்பட்டது. இத்தொகை தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்குக்காக எடுக்கப்பட்டு, பின் அத்தொகை வேறு கணக்கிலிருந்து டெபாசிட் செய்யப்பட்டது என்றார்.

இலாகா அமைச்சராக நீடிக்க வைப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி, ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

வெளிநாடுகளுக்கு தப்பி விடுவார் என்றால், யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது, அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என வாதத்தை நிறைவு செய்தார்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து தான் பெறப்பட்டன என்றார். பின்னர், அமலாக்கத் துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நாளை (பிப்ரவரி 15) பிற்பகலுக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானம் - அண்ணாமலை ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.