ETV Bharat / state

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - TN Govt College admission date

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 6:33 PM IST

Updated : May 6, 2024, 8:43 AM IST

Directorate of Collegiate Education: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு கல்லூரி சேர்க்கை புகைப்படம்
அரசு கல்லூரி சேர்க்கை புகைப்படம் (Credits - ETV Bharat TamilNadu)

சென்னை: தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்தாண்டைப் போலவே மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்த பின்னர், ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. கடந்தாண்டு 1 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம். தாமாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மையங்களின் பட்டியல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.

இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள். கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் மே 6 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 044 – 24343106 அல்லது 24342911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோடை ஸ்பெஷல் விமானங்கள்: சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவை..பயணிகள் மகிழ்ச்சி - Chennai Airport

Last Updated :May 6, 2024, 8:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.