ETV Bharat / state

பெரம்பலூர் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து; ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்! - Furniture Godown Fire Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 7:43 PM IST

Perambalur Furniture Godown Fire Accident Photo
Perambalur Furniture Godown Fire Accident Photo (Credits to ETV Bharat Tamilnadu)

Perambalur Furniture Godown Fire Accident: பெரம்பலூர் பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குடோனில் வைத்திருந்த ஏசி, ஏர் கூலர், ஃபேன் உள்ளிட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்: பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவிலுள்ள பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், குடோனில் வைத்திருந்த ஏசி, ஏர் கூலர், ஃபேன் உள்ளிட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் தெருவில், குணசேகரன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அருகிலுள்ள அப்துல் சலாம் என்பவரது கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இந்த பர்னிச்சர் கடைக்குச் சொந்தமான குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடோனில் எதிர்பாராத விதமாக இன்று மதியம் சுமார் 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மூன்றாவது மாடியில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் விற்பனைக்காக வைத்திருந்த ஏசி, ஏர் கூலர், ஃபேன், ஃப்ரிட்ஜ், கட்டில், மெத்தை, அடுப்பு உள்ளிட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்தது.

நகரின் மையப் பகுதியில் நெருக்கடி மிகுந்த கடைகள் மற்றும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் கரும் புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கடும் வெயில் இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குடோன் அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வரும் செருப்பு கடையின் மாடியில் பெயர் பலகை வைப்பதற்காக வெல்டிங் செய்த போது ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரிய வந்திருக்கிறது. இந்த விபத்தில் எவருக்கும் காயமோ அல்லது உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வு 2024; தலைமுடியை ஆராய்ந்த பின்னரே அனுமதிக்கப்பட்ட மாணவிகள்! - NEET 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.