ETV Bharat / state

இலங்கையில் இருந்து ராமநாதபுரம் வழியாகக் கடத்தப்பட்ட 4.9 கிலோ தங்கம் இந்தியக் கடலோர காவல் படையினரால் பறிமுதல்! - gold smuggling

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 10:16 PM IST

இலங்கையில் இருந்து ராமநாதபுரம் வழியாக கடத்தப்பட்ட 4.9 கிலோ தங்கம் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல்!
இலங்கையில் இருந்து ராமநாதபுரம் வழியாக கடத்தப்பட்ட 4.9 கிலோ தங்கம் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல்!

Gold smuggling: மண்டபம் அருகே இந்தியக் கடலோர காவல்படை மற்றும் சுங்க தடுப்பு பிரிவுடன் இணைந்து நடுக்கடலில் கடத்தப்பட்ட 4.9 கிலோ வெளிநாட்டுத் தங்கம் வருவாய் புலனாய்வுத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்: இந்தியக் கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) மற்றும் ராமநாதபுரம் சுங்கத் தடுப்பு பிரிவு (சி.பி.யூ), ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், மண்டபம், வேதாளை கடற்கரை அருகே நடுக்கடலில் 4.9 கிலோ வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளது.

இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை வழியாக மீன்பிடி படகு மூலம் ஒரு கும்பல் இந்தியாவுக்கு வெளிநாட்டுத் தங்கத்தைக் கடத்துவதாகக் கடலோர காவல்படைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 3ஆம் தேதி இரவில் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகுகளின் நடமாட்டத்தை டிஆர்ஐ மற்றும் இந்தியக் கடலோர காவல்படை அதிகாரிகள் கண்காணித்தனர்.

இதனை தொடர்ந்து 4ஆம் தேதி அதிகாலையில், நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அடையாளம் கண்ட அதிகாரிகள், கடலோரக் காவல் படைக் கப்பல் மூலம் அந்தப்படகைத் துரத்திச் சென்று இடைமறித்தனர். இடைமறிக்கப்படுவதற்குச் சற்று முன்பு, சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த நபர்களில் ஒருவரால் ஒரு சரக்கு கடலில் வீசப்பட்டதை அதிகாரிகள் கவனித்தனர்.

இதனையடுத்து அந்த படகில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், "கடலில் வீசப்பட்ட சரக்கு இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட வெளிநாட்டுத் தங்கம் என்றும், அது இலங்கையில் இருந்து ஒரு படகில் இருந்து ஆழ்கடலில் பெறப்பட்டது என்றும், அவர்கள் கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ராமநாதபுரம் போலீசார் ஒரு படகில் வந்து கடத்தப்பட்ட தங்கத்தைக் கடலுக்குள் வீசிய இடத்தைக் கண்டுபிடித்துத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

பின்னர் 5ஆம் தேதி மதியம் கடத்தப்பட்ட தங்கம் கடற்பரப்பில் தீவிர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. கடலடியிலிருந்து மீட்கப்பட்ட சரக்கைத் திறந்து பார்த்த போது, ரூ.3.43 கோடி மதிப்புள்ள 4.9 கிலோ எடையுள்ள கச்சா தங்கக் கட்டிகள் ஒரு துண்டில் இறுக்கமாகக் கட்டப்பட்டு , கண்டுபிடிக்க முடியாதபடி கடலுக்குள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த 4.9 கிலோ வெளிநாட்டுக் கடத்தல் தங்கத்தை டி.ஆர்.ஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகளை வெளியே விடாதீர்கள்: மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு! - Mayiladuthurai Leopard Photo

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.