ETV Bharat / state

'தேர்தல் பத்திரம் குறித்த விவகாரத்தை திசைதிருப்பவே, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு' - பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 1:05 PM IST

State Minorities Commission Chairman Peter Alphonse
State Minorities Commission Chairman Peter Alphonse

Electoral Bond issue: தேர்தல் பத்திர விவகாரம் பத்திரிக்கைகளில் வருவதால், தலைப்புச் செய்திகளை திருடி கொள்வதற்காகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஞானம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் ஏஒய்எஸ் பரிசுத்த நாடார் நூற்றாண்டு நினைவு சொற்பொழிவு விழா நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பியும், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் ஜனநாயக மரபு படியும், நியாயப்படியும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எப்படி தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டுமோ, அப்படி நியமிக்கப்படவில்லை என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் அரசாங்கத்தின் 2 அமைச்சர்கள் மட்டும் இருந்து, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுத்தது என்பது எந்தவிதமான நியாய, தர்மத்திற்கும் உட்படாத ஒரு ஏற்பாடு.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதற்கான வழக்கு விசாரணைக்கு வருகின்ற உடனே மிக அவசரமாக அந்த ஏற்பாட்டினை செய்திருக்கிறார்கள். அதிலும் காங்கிரஸ் கட்சியினுடைய பாராளுமன்ற தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு முறையான தகவல்கள் கொடுக்கப்படவில்லை.

யாருடைய பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன, அவர்களுடைய தகுதிகள் என்ன, இதைப் பற்றி எந்த விவரமும் கொடுக்கப்படாமல், கூட்டம் நடப்பதற்கு பத்து மணி நேரத்திற்கு முன்பு சில பெயர்களை கொடுத்துவிட்டு, அவர்களைக் கூட்டத்திற்கு அழைத்து இருப்பதால் அவர்களால் அதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய தகவல்களும் வந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை இப்படிப்பட்ட மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது இல்லை.

அரசாங்கமே ஒரு வழிப்பறி கொள்ளையரை போல, மிகப்பெரிய தொழிலதிபர்களை மிரட்டி, அவர்கள் வீடுகளிலே வருவாய் புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற துறைகளை ஏவிவிட்டு, அவர்கள் வீடுகளிலே சோதனை செய்து, அவர்களை கைது செய்யப்படுவோமோ என்கிற அச்சத்தில், ரைடு நடந்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் அவர்களிடமிருந்து, நூற்றுக்கணக்கான கோடிகளை வசூல் செய்திருப்பது என்பது வழிப்பறி கொள்ளையை விட மோசமான ஒன்று.

அப்படிப்பட்ட மோசமான செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டிருப்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது, இதற்கு பொறுப்பேற்று மோடி அரசு, ராஜினாமா செய்வதுதான் முறையான செயலாகும். ஏனென்றால் கடந்த காலங்களில், மிக சாதாரண குற்றங்களுக்கு எல்லாம் மன்மோகன் சிங் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இன்று இவ்வளவு பெரிய கொடுமை சுதந்திர இந்தியா வரலாற்றில் இல்லாத பெரிய நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

ஆகவே அதற்கு தார்மீக பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என்பதுதான் நியாயம். தேர்தல் பத்திரங்கள் பற்றிய செய்திகள் வருவதால் தலைப்புச் செய்திகளை திருடி கொள்வதற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2 ரூபாய் குறைப்பு என்று செய்தி வருகிறது. அந்த 2 ரூபாய் செய்தி வந்தால் அது தலைப்பு செய்தியாக மாறி தேர்தல் பத்திரங்களைப் பற்றிய செய்திகள் சிறிய செய்திகளாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி, பல தலைப்பு செய்திகளையும், இந்தியாவின் ஆன்மாவையே தட்டிக் கேட்கிற செய்தியாக இந்த செய்தி வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகின்ற போது பெட்ரோல், டீசல் விலை குறைப்பதும், தேர்தல் முடிந்த பிறகு கூட்டுவதும், பாஜகவிற்கு கைவந்த கலை.

மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இரண்டு மற்றும் மூன்று மாநிலங்களில் பிரச்சனைகள் இருக்கிறது. அதில் என்ன நல்ல கோணம் என்று சொன்னால், அங்கு யார் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணி ஆதரிக்கின்ற வெற்றியாகத்தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் சுற்றுலாத்துறை கண்காட்சி; பொதுமக்களைக் கவரும் ராமோஜி ஃப்லிம் சிட்டி அரங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.