ETV Bharat / state

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்கள், எஞ்சிய வாழ்நாளைக் குடும்பத்தினருடன் வசிக்க நடவடிக்கை - திமுகவை வலியுறுத்திய இபிஎஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:33 PM IST

திமுகவை வலியுறுத்தும் இபிஎஸ்
எஞ்சிய வாழ்நாளை குடும்பத்தினருடன் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Rajiv assassination case: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், உடல்நலக் குறைவால் மரணமடைந்த நிலையில் எஞ்சியுள்ளவர்களையாவது அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களை, முகாமில் தனிமைச் சிறையிலிருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்லத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகச் சிறையில் 32 ஆண்டுக்கால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் திரு.ராபர்ட் பயஸ், திரு.ஜெயகுமார், திரு.முருகன் திரு.சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் இத்தகைய மனிதத் தன்மையற்ற நிர்வாகத்தின் காரணமாகச் சாந்தன் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.சாந்தன், கடந்த 28.2.2024 அன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அவர்கள், சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ பழகவோ, உடற்பயிற்சி நடைப்பயிற்சி செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமை அறையில், சிறை போலவே அடைக்கப்பட்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே 32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றைச் சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதிலும், சிறையில் இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, மூச்சு முட்டத் தனிமைச் சிறையினில் அடைக்கப்படுவோம் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு இவர்கள் அனைவரும் தவித்து வந்துள்ளனர். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதன் நோக்கமே அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது தான்.

முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டிற்குச் செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளி நாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக, விடுதலையானவர்கள் தங்களை இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லும்படியும், முகாமில் மறுக்கப்படும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர், தமிழ் நாடு முதலமைச்சர், UNHCR என தொடர்ச்சியாகப் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்று தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, நடைப்பயிற்சிக்கு அனுமதி கேட்டுப் பல மாதங்கள் ஆன நிலையில், இந்த விடியா திமுக அரசு குறைந்தபட்சம் இந்த கோரிக்கைக்குக் கூட செவி சாய்க்கவில்லை என்பதில் இருந்தே அவர்கள் எத்தகைய மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

திரு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபொழுது, ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு பிரபாகரன் அவர்களுடைய வயதான தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவச் சிகிச்சைக்காக முதலில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க மறுத்து விமானத்திலிருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது அப்போதைய மைனாரிட்டி திமுக அரசும், மத்தியக் காங்கிரஸ் அரசும்தான்.

அதேபோன்று இன்று, விடுதலை பெற்ற திரு. சாந்தனை காலத்தே வெளிநாடு செல்ல மத்திய அரசுடன் பேசி, உரிய அனுமதி வாங்கித் தராத காரணத்தால், இறுதிக் காலத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ முடியாமல் மரணமடைந்துள்ளதற்கு இந்த நிர்வாகத் திறனற்ற, மனிதாபிமானமற்ற விடியா திமுக அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.

இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த திரு.ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் திரு.இராபர்ட் பயஸ் மற்றும் திரு.முருகன் ஆகியோரது கடைசிக் காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையிலிருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், விடியா திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.

இதையும் படிங்க: சாந்தன் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.