ETV Bharat / state

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பக்தர்களை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 10:41 PM IST

Updated : Mar 16, 2024, 2:50 PM IST

Kovai
கோவை

Velliangiri Andavar Temple: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு வந்த பக்தர்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் பக்தர்களை விரட்டிய காட்டு யானை.. பதைபதைக்கும் வீடியோ!

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ஆலந்துறை அடுத்த பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளதால், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் இக்கோயிலைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு (மார்ச் 14) வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறியுள்ளது. கார் நிறுத்தம் அருகே அந்த யானை வந்தபோது, அங்கிருந்த பக்தர்கள் யானையை புகைப்படம் எடுப்பதிலும், யானையை பார்த்து கணேசா என சாமி கும்பிடுவதுமாக இருந்துள்ளனர்.

அப்போது அந்த யானை திடீரென பக்தர்களை துரத்தியதால், அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். கார்களுக்கு இடையே ஒளிந்து கொண்டதால், பக்தர்கள் யானையிடமிருந்து உயிர் தப்பினர். பின்னர் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் அங்கு வந்து, ஒற்றை ஆன் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "வனப்பகுதியை ஒட்டி கோயில் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் வனப்பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோயில் பகுதிக்கு வந்தால், உடனடியாக அங்கிருந்து விரட்ட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வனத்துறையினரிடம் இது குறித்து கேட்டபோது, "தற்போது கோடை காலம் என்பதால், இரவு நேரங்களில் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகிறது. மலையடிவாரத்தில் உள்ள கிராம மக்களும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மிகவும் ஜாக்கிரதையாக வர வேண்டும். மேலும், பக்தர்கள் வனப்பகுதி ஓட்டிய பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Last Updated :Mar 16, 2024, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.