ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த கருத்துகளை கூற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்! - DRUG AWARENESS FOR SCHOOL STUDENTS

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 5:40 PM IST

DRUG AWARENESS FOR SCHOOL STUDENTS: பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை காலை வணக்கக் கூட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை இயக்ககம்
பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் (CREDIT - ETV Bharat Tamil Nadu)

சென்னை: 2024- 2025ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பள்ளிக்கால அட்டவணை பள்ளி நாட்காட்டி: 2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியில் பள்ளி தொடங்கும் நாள். தேர்வுகள் நடைபெறும் நாள், ஆசிரியர்களுக்கான பயிற்சி நாட்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி.

தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி, மன்றச் செயல்பாட்டிற்கான பயிற்சி எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான பயிற்சி, தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்சி, பருவத் தேர்வு அட்டவணை போன்ற தரவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளும் முறையான பணிப் பகிர்வுடன் கூடிய வகுப்பிற்குரிய மற்றும் ஆசிரியர்களுக்குரிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு பள்ளி திறக்கும் நாள் முதல் செயல்படுத்தப்பட வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு பாட வேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

உடற்கல்வி ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாட வேளைகளில் விளையாட வைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் ஆறு முதல் 8ஆம் வகுப்பு வரை, 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

தலைமை ஆசிரியர், உதவித் தலைமையாசிரியர் முன்னிலையில் காலை வணக்கக் கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களைத் தவறாமல் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை அன்று காலை வணக்கக் கூட்டத்தில் 6 முதல் 12 வகுப்பு உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள், கருத்து பரிமாற்றம் சார்ந்து பேச்சு, கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திருக்குறன் கதைகள் இடம்பெறலாம்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம் ஐந்தாம் பாட வேளை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் சிறார் பருவ இதழ் செய்தித்தாள் பள்ளி நூலகத்தில் உள்ள நூல்கள் போன்றவற்றை வாசிக்கச் செய்ய வேண்டும்.
வாரத்திற்கு ஒரு நாள் அனுபவப் பகிர்வு, நீதி போதனை பாடவேளைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மனநலன் சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.

வாரத்திற்கு ஒரு நாள் நூலகச் செயல்பாடுகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்திட தெரிவிக்கப்படும் நாட்கள் மற்றும் தேவையான நாட்களில் உரிய அறிவுரைகளை பின்பற்றி நடத்திட வேண்டும். அதே நாளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு முன்பு அந்தந்த வகுப்புகளில் பெற்றோர் கூட்டம் நடத்தப் பெற வேண்டும்.

இக்கூட்டத்தில் ஆசிரியர் பெற்றோரிடம் அவர் தம் குழந்தைகளின் வருகை, கற்றல் நிலை. உடல் நலம், மனநலம், கல்வி இணை செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன் ஒவ்வொரு நாளும் வீட்டில் மாணவரின் கற்றல் சார்ந்து பெற்றோர் செய்ய வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூற வேண்டும். மேலும் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அதனை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு.. வளாகம் முழுவதும் சுகாதாரமாக்க அறிவுறுத்தல்! - School Reopen Instructions

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.