ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு.. வளாகம் முழுவதும் சுகாதாரமாக்க அறிவுறுத்தல்! - School Reopen Instructions

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 5:11 PM IST

Safety measures in schools: கோடை விடுமுறை முடியும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகள் திறக்கப்படும் முன் அதனை சுத்தம் செய்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் புகைப்படம்
பள்ளி மாணவிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் புகைப்படம் (CREDITS- ETV BHARAT TAMIL NADU)

சென்னை: கோடை விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன், அதனை சுத்தம் செய்யும் பணிகளும், மாணவர்களுக்கான பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து இன்று (மே 26) கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

2024-2025ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்

அதில், “2024- 2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜீன் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னர், பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைபடுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளிலுள்ள தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்ய வேண்டும்.

பள்ளி கட்டிடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி, மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தூய்மையான, பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும், சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்துதல் அவசியம். இவைகளை விதிகளின்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திறந்தவெளிக் கிணறுகள் இருப்பின், அதன் மேற்பரப்பினை யாரும் அணுகாத வகையில் மூடிட நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றி தூய்மை செய்யப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளி வளாகத்தில், அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக படிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகத்தினுள் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழுப் பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்றிட வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின், அத்தகைய கட்டிடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும், வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் சோப்பு, சோப்பு கரைசல் வைக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின்சுவிட்சுகள் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதுடன் மரங்கள் எளிதில் விழாத வகையில் உள்ளதை உறுதிபடுத்திட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிர புயலாக வலுவடைந்த ரீமால்... தமிழக துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! - REMAL CYCLONE LATEST UPDATE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.