ETV Bharat / state

ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ பாஸ் கட்டாயம் - உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! - Epass to visit ooty and kodaikkanal

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 5:53 PM IST

Updated : Apr 29, 2024, 7:06 PM IST

உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இனி ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் கட்டாயம்

E-pass to visit Ooty and Kodaikkanal: ஊட்டி, கொடைக்கானலில் வரும் மே 7ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை (E Pass) அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கரோனா பரவல் காலத்தில் நாடு முழுவதும் அமலில் இருந்த இ-பாஸ் நடைமுறை, தற்போது மீண்டும் ஊட்டி, கொடைக்கானலில் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7 ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்.29) உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஊட்டிக்கு தினமும் ஆயிரத்து 300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும் எனவும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாது எனவும், சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை, இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ–பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7 ம் தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த இ–பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களைக் கொடுக்க வேண்டும் எனவும், இ-பாஸ் வழங்குவதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளைத் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஜூலை 5 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தொடங்கும் கோடை விழா.. மே 1 முதல் உதகை நகருக்குள் கடும் போக்குவரத்துக் கட்டுப்பாடு!

Last Updated :Apr 29, 2024, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.