ETV Bharat / state

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு; சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 9:18 PM IST

madras high court
madras high court

DR. Subbaiah murder case: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று துவங்கப்பட்டுள்ளது.

சென்னை: நிலப் பிரச்சனை தொடர்பாகச் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி , வழக்கு தொடர்பான விபரங்களைச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.

இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில், இன்று இறுதி விசாரணை துவங்கியது.

அதில் காவல் துறை தரப்பில், டாக்டர் சுப்பையாவுக்கும், பொன்னுசாமிக்கும் இடையில் நிலப்பிரச்சனை எப்படி உருவானது, கொலைக்கான சதித் திட்டம் தீட்டியது, ஆயுதங்கள் வாங்கியது குறித்தும், இது சம்பந்தமாக அரசுத் தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் விவரங்களைக் காவல் துறை தரப்பு வழக்கறிஞர் விளக்கி வாதிட்டார்.

கொலை செய்யக் கூலிப் படையினருக்குக் கொடுப்பதற்காக 7.5 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்தது, அப்ரூவரானவரின் சாட்சியம் ஆகியவற்றையும் அரசு தரப்பு வழக்கறிஞர் விவரித்தார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நேரில் பார்த்ததாகக் கூறப்படும் இரு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இரு ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கைதானவர்களுக்குச் சட்ட பூர்வ ஜாமீன் வழங்கப்பட்டது.

என்று விசாரணையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் தொடர்ச்சிக்காக வழக்கின் விசாரணை நாளைக்கு (பிப் 20) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ் புதல்வன் திட்டம்' இனி மாணவர்களுக்கு மாதம் 1000 - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.