ETV Bharat / state

பாஜகவிற்குத் தேர்தல் செலவிற்காக ரூ.6,500 கோடி கொடுத்தவர்கள் யார்? பிரதமருக்கு ஆ.ராசா கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 4:34 PM IST

ஆ.ராசா
ஆ.ராசா

DMK MP A.Raja speech: பாஜகவிற்குத் தேர்தல் செலவிற்காக ரூ.6 ஆயிரத்து 500 கோடி பணத்தைக் கொடுத்தவர்கள் யார் என்பதைத் தீர விசாரித்தால் மோடி சிறைக்குச் செல்வது உறுதி. பிரதமர் மோடியை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்கக்கூடிய காலம் விரைவில் வரும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா

கரூர்: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள், 37 நாடாளுமன்றத் தொகுதிகளில், திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம், தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று (பிப்.18) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டார்.

பின்னர், கூட்டத்தில் ஆ. ராசா பேசியதாவது, “பிரதமர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து வளர்ச்சி திட்டங்கள், நாட்டின் பாதுகாப்பு குறித்துத்தான் பேசவேண்டும். ஆனால், காங்கிரஸ் பற்றி அவதூறாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஜனநாயக ரீதியாக ஒரு ஆளும் கட்சியின் மீது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்கு முழு உரிமை உண்டு.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பணியில் தான் கடந்த 9 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சியின், மோடி அரசு மேற்கொண்டு வந்தது. பாரதிய ஜனதா கட்சி இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை. குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாத இந்தியப் பிரதமர் மீண்டும் இந்தியாவை ஆள வேண்டுமா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த 2017-18 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவோர் பெயர்களை வெளியிடத் தேவையில்லை என்பதைச் சட்டமாக்கி, ரூ. 6 ஆயிரத்து 500 கோடி நன்கொடையைப் பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் ரூபாய் 6 ஆயிரத்து 500 கோடி பெற்றுள்ளது. தற்பொழுது நீதிமன்றம், தேர்தல் நன்கொடை பத்திரத்தை ரத்து செய்தது மட்டுமல்லாமல் நன்கொடை பெற்ற விவரங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் பெற்றதற்கு ஏன் கைது செய்யக்கூடாது.

பிரதமரின் நண்பராக உள்ள கார்ப்பரேட் முதலாளி அதானி, கணக்கு வழக்குகளைத் திருத்தி அமைத்து, 20க்கும் மேற்பட்ட நாடுகளில், முறைகேட்டில் ஈடுபட்டு வருமானம் ஈட்டினார் என அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கேள்வி எழுப்பியும், பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைப் பார்த்துப் பயப்படாத இந்திய பிரதமர், பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கப் பயந்து ஒதுங்கினார். இதே போன்று, ரபேல் விமான ஊழல் குறித்து கேள்வி எழுப்பிய போதும் பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை. பிரதமரை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்கக்கூடிய காலம் விரைவில் வரும்.

இக்கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏக்கள், சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), காந்திராஜன் (வேடசந்தூர்) கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி மற்றும் கரூர் கிருஷ்ணராயபுரம், விராலிமலை, மணப்பாறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பொறுப்பு வகிக்கும் திமுக நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழில் செயற்கை நுண்ணறிவு - ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.