ETV Bharat / state

பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா விவாதம்; நீட் விலக்கு குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்பி வில்சன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 1:29 PM IST

Updated : Feb 11, 2024, 6:39 AM IST

DMK MP Wilson questioned the NEET Exemption Bill in the Rajya Sabha
எம்பி வில்சன்

NEET Exemption Bill: மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்ற போர்வையில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தற்போது தேர்வின் மீதான பயத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும், நீட் தேர்வு தமிழகத்தில் 16 மாணவர்களின் உயிரை பறித்துள்ளது என திமுக எம்பி வில்சன் மாநிலங்களவை விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லி: அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான தகுதித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில், பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுத்தல் மசோதா 2024 (THE PUBLIC EXAMINATIONS (PREVENTION OF UNFAIR MEANS) BILL) மக்களவையில் பிப்ரவரி 6ஆம் தேதி, பணியாளர் நலன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடந்தது.

மாநிலங்களவையில் பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுத்தல் மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி வில்சன், “பொதுத்தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் மசோதா 2024 ஆட்சேர்பு தகுதித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க முயல்கிறது. அதேநேரம், தொழில்முறை படிப்புகளுக்கு எதற்கு நுழைவுத் தேர்வு என்ற கேள்வியும் எழுகிறது.

ஏற்கனவே மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படலாம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தொழில்முறை படிப்புகளைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வுகளை நடத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்வுகள் என்பது கல்வியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அவர்கள் தேர்வினை கடினமானதாகவும், சாத்தியமற்றதாகவும் ஆக்குகிறார்கள். இதனால் பின்தங்கிய சமூக மக்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய சாத்தியமில்லாமல் போகிறது என அம்பேத்கர் கூறிய ஒன்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

தேசிய தேர்வு முகமையால் (National Testing Agency) நடத்தப்படும் நீட் தேர்வுக்கும் இந்த மசோதா பொருந்தும். ஆனால், நீட் தேர்வு தேவையா என்பதுதான் கேள்வி. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்ற போர்வையில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தற்போது தேர்வின் மீதான பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்களுக்கு நீட் தேர்வு என்பது அனுக முடியாதது மட்டுமல்ல, நிறைவேறாத கற்பனையாகவும் மாறி வருகிறது. மருத்துவராக வேண்டும் என்கிற மாணவர்களின் கனவைப் பயன்படுத்தி, நீட் பயிற்சி மையங்கள் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது. வசதி படைத்தவர்கள் மட்டுமே அதில் பயிற்சி பெற முடியும். இந்தியாவில் நீட் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுகின்றன. இது பயிற்சி மையங்கள் தொழில் மையங்களாகியுள்ளதை காட்டுகிறது.

மருத்துவர் ஆகும் கனவு நிறைவேறாதபோது விரக்தி அடையும் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். நீட் தேர்வு இதுவரை தமிழ்நாட்டில் 16 மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்து, அவர்கள் உயிரைப் பறித்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. மாணவர்கள் ஏற்கனவே பொதுத் தேர்வில் தேர்வாகித்தான் வருகின்றனர். பின்னர் ஏன் நீட் தேர்வில் இருந்து மாநிலங்கள் விலக்கு பெற மத்திய அரசு அனுமதிக்கவில்லை?

தமிழக சட்டமன்றம் நீட் விலக்கு பெறுவதற்கு 2022-இல் ஒரு மசோதாவை நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கும் அனுப்பியது. இன்று வரை அந்த மசோதாவின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை. நான் நாடாளுமன்றத்தில் 2024 பிப்ரவரி 6ஆம் தேதி கேள்வி எண் 405-இன் கீழ், நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன என கேள்வி எழுப்பினேன். அதற்கு அமைச்சர் எந்த பதிலும் அளிக்காதது எனக்கு அதிர்ச்சியளித்தது. அப்படி பதில் அளிக்காமல் தவிர்ப்பது, ராஜ்யசபாவில் விதி 12-ஐ மீறுவதாகும்.

உறுப்பினர்களின் கேள்விக்கே அமைச்சர்கள் பதில் அளிக்காமல் இருக்கும்போது, மாணவர்கள் மட்டும் எப்படி கேள்விக்கு பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்? நான் நீட் விலக்கு மசோதாவிற்காக ஒரு தனிநபர் மசோதாவையும் நிறைவேற்றியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி!

Last Updated :Feb 11, 2024, 6:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.