ETV Bharat / state

பொது மேடையில் தகாத வார்த்தை.. சர்ச்சையான அமைச்சர் காந்தியின் வீடியோ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 3:07 PM IST

Updated : Jan 30, 2024, 7:37 PM IST

Minister Gandhi
சர்ச்சையான அமைச்சர் காந்தியின் வீடியோ

Minister Gandhi: ராணிப்பேட்டையில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பொதுமேடையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் காந்தியின் வீடியோ

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற ‘மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள்’ பொதுக்கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

அப்போது அமைச்சர் பேசும்போது, ஓர் இடத்தில் தகாத வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் காந்தியின் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுக்கான காரணத்தைக் கண்டறிய, ராணிப்பேட்டை மாவட்ட திமுகவினர் அமைச்சர் பேசிய முழு காணொளியையும் பார்வையிட்டு கருத்து தெரிவித்து உள்ளனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, "1967-ல் இருந்து கட்சியில் இருக்கிறேன். ஆனால் எந்தப் பொறுப்புக்கும் நான் வரவில்லை. 1991-ல் ஜெயிலில் போட்ட பிறகுதான் 1996-ல் சட்டமன்ற உறுப்பினராகிறேன். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், திமுக சாதாரண கட்சி கிடையாது. நான் இந்த ஊருக்கு 1963-ல் வியாபாரம் செய்ய வந்தவன். திமுக என்ற முன்றெழுத்துதான் எனக்கு அடையாளம் கொடுத்தது. ஆனால், இன்னொருத்தரைப் பற்றி நாம் பேசவேக் கூடாது. நம் வேலையை செய்துகொண்டே போகணும்.

தெருவில் போகும்போது நாய் குரைக்கிறது என்பதால் அதற்குப் பின்னாடியே நீங்களும் ஓடுவீர்களா? அதேபோல, ஒருத்தரைப் பற்றி திரும்ப திரும்பப் பேசினால், அவன் ஃபேமஸ் ஆவான். அவன் யாரென்று தெரியாமல் இருந்தான். அவனைப் பற்றி தெரிய வைக்காதீர்கள்.

மகளிருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நம்முடைய ஆட்சிதான். மகளிர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களின் ஓட்டு நமக்குத்தான். ஆண்கள் அனைவரும் காலையில் ஒரு மாதிரி, மதியம் ஒரு மாதிரி, மாலையில் ஒரு மாதிரி இருப்பார்கள்.

அதேபோல ‘நாம் செய்வது யாருக்கும் தெரியாது’ என்று நினைக்கக் கூடாது. எல்லாம் ஓப்பன் சீக்ரெட்தான். அதனால், யாரோ மைக் பிடித்து பேசிவிட்டால் அவர் யாரென்று மக்களுக்கு தெரியாதா? மக்கள் அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால் எழுந்து செல்லும்போதுதான் ‘வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறான். இவன் செய்வதெல்லாம் இப்படி என்று பேசுவார்கள் என்ற போது தான் அந்த வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்' எனத் தெரிகிறது என கூறி உள்ளனர்.

மேலும், தனிநபர் யாரையும் குறிப்பிட்டுத் திட்டுவதற்காகவும் அப்படி பேசவில்லை. அமைச்சர் குறித்து யாரும் தவறாக வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என ராணிப்பேட்டை மாவட்ட திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பொது நிகழ்ச்சிகளில் மக்களை ஒருமையில் பேசியதாக திமுக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில் தற்போது அந்த வரிசையில் அமைச்சர் காந்தியும் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: "நாங்கள் இணைந்தால் எந்த கட்சிக்கும் இங்கு வெற்றியே கிடையாது" - ஓபிஎஸ் பேச்சு

Last Updated :Jan 30, 2024, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.