ETV Bharat / state

கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள இணை ஆணையரிடம் விண்ணபிக்கலாம்: உயர் நீதிமன்றம் - tillage work in temples

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 2:06 PM IST

Etv Bharat
Etv Bharat

tillage work in temples: கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில், பழமையான, பாரம்பரியம் மிக்க கோவில்களில், தூய்மை பணிகளில் பொது மக்கள் பங்கேற்கும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு, கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் அறநிலையத்துறை இணை கமிஷனரை அணுகி, விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

அந்த விண்ணப்பங்களை, ஏழு நாட்களுக்குள் பரிசீலித்து, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பக்தர்கள் கோவில் வளாகம், குளங்களை சுத்தம் செய்து, அங்கு வளர்ந்திருக்கும் செடிகளை அகற்றி, கோவில் வாயில்கள், கதவுகளுக்கு வர்ணம் பூசலாம்.

ஆனால், கோயில்களை புதுப்பிக்கவோ? அல்லது புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவோ? பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

கோயிலை பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அறநிலையத்துறை எடுக்க வேண்டும். கட்டமைப்பை அவ்வப்போது ஆய்வு செய்து, நிபுணர்களுடன் கலந்தாலோசித்துப் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள், பழமையான சைவ கோவில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளை கண்காணிக்க, அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட மாவட்ட குழு, கோவில்களின் தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் ராஜினாமா..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.