ETV Bharat / state

புலியூர் பேரூராட்சியில் திமுக துணைத் தலைவர் தலையீடு.. பெயரளவில் மட்டுமே பேரூராட்சி இயங்குவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 7:45 PM IST

Etv Bharat
Etv Bharat

Puliyur town panchayat: கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் திமுக துணைத் தலைவர் தலையீடு காரணமாகப் பெயரளவில் மட்டுமே பேரூராட்சி இயங்குவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

புலியூர் பேரூராட்சி உறுப்பினர் கூட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.27) காலை உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. புலியூர் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்களைச் செயல் அலுவலர் கிருஷ்ணன் வாசித்தார்.

இதனையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தாங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி மற்றும் துணைத்தலைவர் அம்மையப்பன் ஆகியோர் தங்களது ஆதரவு உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார். இதனால் பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 1வது வார்டு உறுப்பினர் கலாராணி கூறுகையில், "திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி கூட்டணி அடிப்படையில், ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டாகத் துணைத் தலைவர் அம்மையப்பன் என்பவர் தற்காலிகத் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

தற்பொழுது, திமுகவைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலர் ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்து வைத்துக் கொண்டு துணைத் தலைவர் அம்மையப்பன் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டு வருகின்றார். கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு அனுமதிப்பதில்லை.

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தீர்மானங்களைக் கூட்டத்தில் முன்வைத்து உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு கூட்டத்தை முடித்து விடுகிறார். தனது வார்டு பகுதியில் நீண்ட நாட்களாக மின்விளக்கு அமைத்துத் தர வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும், கூட்டத்தில் முறையிட்டும், பேரூராட்சி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இது குறித்து இன்றைய கூட்டத்தில் முறையிட்டோம், அதற்குப் பதில் அளிக்காமல், கூட்டம் துவங்கிய 10 நிமிடத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் அம்மையப்பன் கூட்டத்திலிருந்து ஆவேசமாக வெளியேறினார். ஜனநாயக ரீதியாகப் பேரூராட்சி கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசுவதற்கு அம்மையப்பன் இடையூறாகச் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், இதே நிலை தொடர்ந்தால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் முறையிட இருப்பதாகத் தெரிவித்தார்". இதனைத் தொடர்ந்து, பாஜக 4வது வார்டு உறுப்பினர் விஜயகுமார் கூறுகையில், "புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவர் தலையிட்டால் பெயரளவில் மட்டுமே பேரூராட்சி அலுவலகம் இயங்கக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது.

கடந்த ஜனவரி மாதக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய, 5வது வார்டு திமுக உறுப்பினர் கண்ணன் என்பவரைப் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரியை பட்டியல் இனத்தவர் என ஜாதி பெயரைச் சொல்லி, திட்டியதாக பசுபதிப்பாளையம் காவல் நிலையத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு பொய்யான புகாரை அளித்துள்ளனர். இதில் அம்மையப்பன் பின்புலமாக இருந்து பேரூராட்சி தலைவரைப் பொய்யான புகாரைக் கொடுக்க வைத்துள்ளார்.

தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்சினைகளை மன்ற கூட்டத்தில் பேசுவதற்கு, துணைத் தலைவர் அம்மையப்பன் அனுமதிப்பதில்லை, தார்ச் சாலை மின்விளக்கு தெரு நாய் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசுவதற்கும் தீர்ப்பதற்கும் பேரூராட்சி நிர்வாகம் தயாராக இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: தொடங்கியது வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தம்; வெறிச்சோடிய அலுவலகங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.