ETV Bharat / state

கோவையில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கமா? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 10:05 PM IST

Etv Bharat
Etv Bharat

Coimbatore Voters names missing complaint: கோவை மக்களவைத் தொகுதியில் வாக்காளர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற புகாருக்கு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.

அதேபோல், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜகவினர் மற்றும் வாக்காளர்கள் சிலர் போராட்டமும் மேற்கொண்டனர். குறிப்பாக, சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என பாஜக மாநிலத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாருக்கு, கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கோயம்பத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை, அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கு பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்டத் தேர்தல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரால் வெளியிடப்படும் பொழுதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் பொழுது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களைச் சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும். இப்பணியில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையைத் தெரிவிக்க வழிவகை உள்ளது. இது தவிர, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, தொடர் நடவடிக்கை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக்கோரி, தேர்தல் ஆணையத்தால் பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. எளிய முறையில் வாக்காளர், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.

எனவே, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின், அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்டத் தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை" - அண்ணாமலை குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.