ETV Bharat / state

"ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை" - அண்ணாமலை குற்றச்சாட்டு! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 8:23 PM IST

கோவை
கோவை

Annamalai K: ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும், வாக்காளர் பட்டியலில் பெயர் மொத்தமாக நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை" - அண்ணாமலை!

கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவரும், கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை, ராம் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, "கோவை பகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வாக்களிப்பதற்காக ஆர்வமாக இங்கு வருகின்றனர்.

கணவருக்கு ஒரு வாக்குச்சாவடி மையத்திலும், மனைவிக்கு மற்றொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒரு நாடாளுமன்ற தொகுதியின் ஒரே இடத்தில் இருந்து 830 வாக்காளர்களின் பெயர்கள் எந்த அடிப்படையில் நீக்கப்பட்டு உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இந்த வாக்குச்சாவடி மையத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும். பாஜக சார்பில் இதற்கான போராட்டமும் தீர்வையும் தேடி வருகிறோம்.

தேர்தல் ஆணையம் முதியோர்களுக்கான போக்குவரத்து வாகன ஏற்பாடு செய்வதிலும் சுணக்கம் காட்டியுள்ளது. இருந்தும் மக்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் மொத்தமாக நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தற்போது நாங்கள் பார்வையிட்ட வாக்குச்சாவடி மையத்தில் கூட ஒரு மூதாட்டி தனக்கு இங்கு வாக்கு இல்லை என மறுப்பதாக அழுது வருகிறார். இறந்த அவரது கணவருக்கு இங்கு வாக்குரிமை உள்ளது. இதுபோல், ஒவ்வொரு பூத்திலும் 20 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய பாஜக தொண்டர்களின் வாக்குரிமை ஆங்காங்கே மறுக்கப்பட்டுள்ளது. நியாயமான நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என மக்களும் விரும்புகின்றனர். இந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை தயாரித்து ஆவணமாக கொடுக்க உள்ளோம்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்பதை இது காட்டுகிறது. நேரடியாக ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று வாக்காளர்களின் பெயரை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குளறுபடிகளால் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு தாமதமாகி வருகிறது. தொடர்ந்து 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் தொடர்ந்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு இயந்திரம் மாற்றி வைக்கப்பட்டதாக கார்த்தி சிதம்பரம் வாக்குவாதம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.