ETV Bharat / state

தேங்காய் கொள்முதல் விலை தொடர் சரிவு.. போடி விவசாயிகள் வேதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 3:40 PM IST

போடிநாயக்கனூர் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் கொள்முதல் விலை தொடர்ந்து சரிவு
போடிநாயக்கனூர் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் கொள்முதல் விலை தொடர்ந்து சரிவு

Bodi Coconut: போடிநாயக்கனூர் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் கொள்முதல் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தேனி: போடிநாயக்கனூர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நாட்டு ரக தேங்காய், ஒட்டு வீரிய ரக தேங்காய் வகைகள் ஆகியவை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தேங்காய் கொள்முதல் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த சபரிமலை சீசன் முடிவடைந்ததும், உரித்த தேங்காய் அதன் தரத்தை பொறுத்து டன் ஒன்றிற்கு ரூபாய் 24 ஆயிரத்து 500 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 23 ஆயிரம் வரை மட்டுமே டன் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்து வருகின்றனர். சில்லறை முறையில் நாட்டு ரக தேங்காய் சிறியது ஒன்றுக்கு 8 ரூபாய் வரையிலும், முதல் தர தேங்காய் 11 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

அதிலும், தேங்காய் எண்ணிக்கை கணக்கில் இல்லாமல், எடைக்கணக்கில் கொள்முதல் செய்யப்படுவதால் தேங்காய் வெட்டுக்கூலி, தேங்காய் உரிப்பு கூலி அனைத்தும் விவசாயிகளையும், குத்தகைதாரர்களையும் சார்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது கொடுக்கப்படும் கூலியின் அளவு கூட, கொள்முதல் செய்யப்படும் தேங்காயில் லாபம் ஈட்ட முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் பெரும்பாலும் தேங்காய் விற்பனை செய்யப்படாமல் எண்ணெய் உற்பத்திக்காக கொப்பரை தேங்காயாக காய வைக்கப்படுகிறது. ஏற்கனவே, விவசாய நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்படும் நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால், போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தென்னை மர தோப்புகள் விரைவில் குடியிருப்பு நிலங்களாக மாறி, தென்னை விவசாயம் அழியும் நிலை ஏற்படும் என்று வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தேனியில் பொம்மையசாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கோலாகலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.