ETV Bharat / state

நான்காண்டுகளாக பொது நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்காத தமிழக அரசு! - பபாசி முன்னாள் தலைவர் வேதனை - TN Libraries

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 3:30 PM IST

TN Libraries: கற்றுக்கொள்ள விரும்பும் மக்களை ஒன்றிணைக்கும் தளமாக விளங்கும் நூலகங்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கான காரணங்கள் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்.

நூலகம் மற்றும் பபாசி முன்னாள் தலைவர் ஆர்.எஸ். சண்முகம்
நூலகம் மற்றும் பபாசி முன்னாள் தலைவர் ஆர்.எஸ். சண்முகம் (PHOTO CREDIT - GETTY IMAGES AND ETVBharat TamilNadu)

சென்னை: "புத்துலகம் படைக்க புத்தகம் படிப்போம்" என அப்துல் கலாம் கூறிய வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். ஒரு புதிய சிறந்த உலகத்தை படைக்கவும், ஒருவரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இன்றியமையாத கருவியாக விளங்குகிறது புத்தகம்.

அப்படி, இந்த அறிவாயுதங்களை சேர்த்து வைத்திருக்கும் இடமான நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை புத்தக பதிப்பாளர்களிடமிருந்து தடையின்றி தமிழக அரசு வாங்க வேண்டும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக போட்டியில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4 ஆயிரத்து 500க்கும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு, நூலகத்திற்கான புத்தகங்களை வாங்காததால் புத்தக பதிப்பாளர்களின் வாழ்வாதாரம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என ஆர்.எஸ்.சண்முகம் வேதனை தெரிவித்தார்.

மெத்தனப்போக்கில் தமிழக அரசு?: தொடர்ந்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக (2020-2024) புத்தக பதிப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளதாக தெரிவித்தார். நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு பதிப்பாளர்களிடம் இருந்து எந்த புத்தகத்தையும் வாங்காமல் உள்ளது. இதுகுறித்து கடந்த நான்கு வருடங்களாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பதிப்பாளர்களிடம் இருந்து புத்தகத்திற்கான ஆர்டரை இதுவரை அரசு எடுக்காமல் உள்ளது. தமிழக பொது நூலக இயக்குனர் இளம் பகவத்திடம் இதுகுறித்து கேட்டபோது, நூலகங்களுக்கு புத்தகம் வாங்குது தொடர்பாக புதிய சாப்ட்வேர் துவங்கப்பட இருப்பதாகவும் இதில் வெளிப்படைத்தன்மையுடன் புத்தகம் வாங்கப்படும் என கூறியதாக சண்முகம் தெரிவித்தார்.

நூலகங்களை கண்டுகொள்ளாத தமிழக அரசு: மேலும், தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4 ஆயிரத்து 500 பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புத்தகங்கள் கேட்டு அரசிடம் இருந்து அழைப்பு வரும். பதிப்பாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள புத்தகங்களை 15 பேர் அடங்கிய கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.

கமிட்டிக்கு அனுப்பும் ஒவ்வொரு நூலுற்கும் ரூ.100 செலுத்த வேண்டும் ஆனால் கடந்த 4 வருடங்களாக எந்த அழைப்பும் வரவில்லை. அது மட்டும் இல்லாமல் ஒரு புத்தகத்திற்கு ரூ.100 என முன்பு கொடுத்திருந்தோம் தற்போது அந்தத் தொகை 450 ரூபாயாக மாற்றப்பட்டு இருக்கிறது மீண்டும் பழைய முறையான ரூ.100 அரசு பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றும் சண்முகம் கூறினார்.

அதுமட்டும் இல்லாமல் தேசிய நூலகங்களுக்கு புத்தகங்களின் நகலையும் வழங்க வேண்டும். வட இந்திய நூலகங்களுக்கு அனுப்பப்படும் புத்தகத்தின் நிலை என்ன ஆனது என்றுகூட எங்களுக்கு தெரியாது. அத்துடன் கன்னிமரா,கலைஞர் மற்றும் அண்ணா நூலகத்திற்கும் நூல்களை அனுப்ப வேண்டி உள்ளது. அதோடு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் புக் இன்டெக்ஸ் நம்பர் (ஐஎஸ்பி நம்பர்) வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் 2024 ஆம் ஆண்டு புத்தக பதிப்பாளர்களிடமிருந்து பெரும் புத்தகத்திற்கு மட்டும் ஐ.எஸ்.பி நம்பர் வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் 2021,2022,2023 ஆகிய ஆண்டுகளுக்கான புத்தகங்களுக்கு பழைய முறையை பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ஆங்கில புத்தகங்களுக்கு சமமாக: ஆங்கில புத்தகங்களுக்கு வழங்கப்படும் விலையை போன்று தமிழ் புத்தகங்களுக்கும் அரசு வழங்க வேண்டும். ஆங்கில புத்தகங்களுக்கு புத்தகத்தின் விலையில் தள்ளுபடி தவிர்த்து மீதி தொகையை அரசு வழங்குகிறது. ஆனால் தமிழ் புத்தகங்களுக்கு ஒரு பாராவிற்கு (16 பக்கங்கள்) ஏழு ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதை மாற்றி தமிழ் புத்தகங்களுக்கு ஒரு பாராவிற்கு 16 கேட்டிருக்கின்றோம்.

எங்கள் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என தெரிவித்திருந்தோம். ஆனால்,அதற்கும் இதுவரை எந்த பதிலும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. அரசு எந்த தாளில் (பேப்பர்) புத்தகம் அச்சிட சொல்கிறதோ அதே தரத்தில் அச்சிட தயாராக இருக்கிறோம் ஆனால் ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் என நிர்ணயித்து புத்தகத்தை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்றார் சண்முகம்.

எழுத்தாளர்கள் தயக்கம் காட்டும் நிலை: தொடர்ந்து பேசிய அவர், குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகத்தை அச்சிடுவதற்கே எங்களுக்கு 60 முதல் 70 ரூபாய் செலவாகிறது. ஆனால் அரசு கொடுக்கும் விலை என்பது 16 ரூபாயிலிருந்து 18 ரூபாய் ஆக மட்டுமே இருக்கிறது. இதுபோன்று வழங்கப்பட்டால் எங்களுக்கு புத்தகம் அச்சிடுவதற்கே ஒரு தயக்கம் உருவாகிறது.

புத்தகங்கள் அச்சிட்டு வெளியே வந்தால் தானே எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்தகம் அச்சிடவில்லை என்றால் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதுவதையே குறைத்துக்கொள்ள நேரிடும்.

நூலகங்களுக்கான புத்தகங்களின் கொள்முதல் இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பதிப்பாளர்களிடம் இருந்து மட்டுமே பெறப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புத்தக பதிப்பாளர்களில் பெருபான்மையானவர்கள் புதியதாக எந்த வெப்சைட்டும் தொடங்கக்கூடிய சூழலில் இல்லை. அவர்களிடம் இருக்கும் சிறிய தொகை கொண்டு சிறிய தொகுப்புகள் கொண்ட புத்தகங்களை அச்சிடிகின்றனர். எனவே அரசு இந்த வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கும் முறையை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசுக்கு கோரிக்கை: அதேபோல், 2024 ஆம் ஆண்டுக்கு மட்டுமே புதிய விதிமுறைபடி புத்தகங்களை அரசு பெற வேண்டும் எனவும், மீதமுள்ள மூன்று வருடங்களுக்கும் (2020-2023) பழைய முறையையே பின்பற்றி புத்தகங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

அரசும் தாமதம் இன்றி மாவட்ட தலைமை நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களுக்கு புத்தகங்களை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஒரு பதிப்பாளரிடம் இருந்து 1000-1500 புத்தகங்கள் வரை பெற முடியும். இதன் மூலம் புத்தக பதிப்பாளர்களும் பலனடைவார்கள்;புதிய எழுத்தாளர்களும் உருவாகும் சூழல் ஏற்படும் என்று பபாசி முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூளையைத் தின்னும் கொடிய நோய்.. மீண்டு வர வழியில்லையா?- மருத்துவர் கூறுவது என்ன? - Amoebic Brain Fever Disease

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.