ETV Bharat / state

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தீர்வு காண வேண்டும் - அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 3:15 PM IST

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்

Anbumani Ramadoss and TTV Dhinakaran: சென்னை பல்கலைக்கழகமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து, அதற்கு தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை: சென்னை பல்கலைக்கழகமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து, அதற்கு தீர்வு காண வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது: இது குறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழகமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு தீர்வு காண வேண்டும் என்று இரு பல்கலைக்கழகங்களின் பணியாளர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அரசு சார்பில் நிதியுதவி: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் கடந்த டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோல், ஓய்வூதியர்களுக்கும் இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அங்குள்ள பணியாளர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. காமராசர் பல்கலைக்கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி 300 கோடி ரூபாய் ஏற்கனவே செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்.

உணவு வழங்குவதற்கு தடுமாறும் நிலை: ஆனால், அரசுத் தரப்பில் நிதியுதவி வழங்கப்படாத நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியவில்லை. இப்போது இரு மாதங்களாக ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், இம்மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். இன்னொருபுறம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கி வைத்திருப்பதால், அதன் விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு கூட தடுமாறும் நிலை உருவாகியுள்ளது.

எந்த உதவியும் வழங்கப்படவில்லை: பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேற்று (பிப்.23) உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

424 கோடி ரூபாய் வரி பாக்கி: 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறைக்கு சென்னை பல்கலைக்கழகம் 424 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருக்கிறது. அதற்கான முதன்மைக் காரணம் , சென்னைப் பல்கலைக்கழகங்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியை தமிழக அரசு குறைந்து வந்தது தான்.

மானியத்தை வழங்கத் தவறியது: அதனால் தான் சென்னை பல்கலைக்கழகம் ஓய்வூதிய நிதி உள்ளிட்டவற்றை ஊதியம் வழங்க பயன்படுத்தியது என்பதை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் 500 கோடி ரூபாய் வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியது தான் நிதிநிலை அறிக்கை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டின் அடையாளம்: அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த நிலையிலில் இருந்து பல்கலைக்கழகம் மீளவும் அரசு தான் உதவ வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது. இது பெரும் தவறு. தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். பெருந்தலைவர் காமராசர் அவர்களால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயரையே தாங்கி நிற்கும் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கு வரி விதிப்பு: இந்த பிரச்சினை தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் இல்லை என்பதால், வருமான வரித்துறை தனது சட்டத்தின் படி அப்பல்கலைக்கழகத்தை தனியார் பல்கலைக்கழகமாகக் கருதி, வரி விதித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊழியர்கள் பெரும் பாதிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, தமிழக அரசு வழங்கும் நிதியை ஏற்கனவே பெருமளவு குறைத்திருக்கும் நிலையில், தற்போது பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி வைத்திருப்பதால் நிர்வாக செயல்பாடுகள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு ஊழியர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

வருமான வரியை எப்படி செலுத்த முடியும்?: கடந்த 6 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கும் நிதியில்லாத நிலையில் வருமான வரியை எப்படி செலுத்த முடியும் என்ற கேள்வியை மாணவர்களும், பேராசிரியர்களும் எழுப்பியுள்ளனர்.

தனியார் வசம் செல்லும் அபாயம்: உலகப்புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களையும், நாடு போற்றும் சாதனையாளர்களையும் உருவாக்கிய 150 ஆண்டுகளை கடந்த சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல் தொடருமேயானால் பல்கலைக்கழகம் தனியார் வசம் செல்வதற்கான அபாயமும் ஏற்படும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான உயர்கல்வியை வழங்கி வரும் சென்னைப் பல்கலைக்கழகத்தை வருமான வரித்துறை விவகாரத்திலிருந்து பாதுகாத்து மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசின் பொதுநிதியிலேயே சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2026 அதிமுக ஆண்டு என்பதை உறுதிப்படுத்துவோம் - ஜெயலலிதா பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமி சூளுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.