ETV Bharat / state

2026 அதிமுக ஆண்டு என்பதை உறுதிப்படுத்துவோம் - ஜெயலலிதா பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமி சூளுரை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 12:19 PM IST

Etv Bharat
Etv Bharat

Edappadi Palaniswami: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதைப் போல, அதிமுக நூறு ஆண்டுகளைக் கடந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றால், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதிட சபதமேற்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை’ என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் திமுக-வைப் போல, அதிமுக இல்லை.

சமரசம் இல்லாமல் வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா. ‘உங்களால் நான், உங்களுக்காகவே நான்’ என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றியவர். சமூக நீதி, சமத்துவம், சமதர்ம சமுதாயம், ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை என்று வெறும் வார்த்தைகளுக்காகவும், வார்த்தை ஜாலங்களுக்காகவும், தேர்தல் வாக்குகளுக்காகவுமே தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்ற திமுகவைப் போல அதிமுக இல்லை என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

சமூக நீதியைக் காத்தவர்: OBC-க்கான இடஒதுக்கீட்டில் 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, 19 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி, ஒரே கையெழுத்தில் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைய இருந்த சூழ்நிலையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை வெளியிடச் செய்து, அதற்கு ஒரு சட்டப் பாதுகாப்பையும் ஏற்படுத்தி, சமூக நீதியைக் காத்தவர் ஜெயலலிதா.

2 கோடி தொண்டர்கள்: அவர்களைத் தொடர்ந்து பயணித்து வரும் நான், எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில், நீட் தேர்வின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயிலக் கூடிய மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், சமூக நீதியைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டைக் கொடுத்து மாணவர்களின் வாழ்க்கையில் மருத்துவக் கனவிற்கு விளக்கேற்றி வைத்தோம். அதிமுகவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டு இருந்த தொண்டர்கள், இன்றைக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர்.

உச்சபட்ச பதவி வழங்குவது அதிமுக: இது அடிமட்டத் தொண்டர்களுக்கான இயக்கம். எந்த தொண்டருக்கும், எந்த நேரத்திலும் உரிய வாய்ப்பு உரிய நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்பதை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நிரூபித்துள்ளனர். ஒரு அடிப்படைத் தொண்டர் எவ்வித பிரதிபலனும் பாராமல் உண்மையாக பணியாற்றி வரும்போது, அவர் எதிர்பார்க்காத நேரத்தில், உச்சபட்ச பதவியை இந்த இயக்கம் வழங்கும். அதுதான் வரலாறு என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சமூகநீதி, சமதர்மம், சமத்துவம் நிலவ வேண்டும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் படைக்க வேண்டும், அடித்தட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும், அவர்களுடைய தேவை என்ன, அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இருப்பிட வசதி போன்றவற்றை எவ்வாறு நிறைவேற்றித் தரவேண்டும்?

முடிவுரை எழுதிட சபதமேற்போம்: அதற்குண்டான வழிவகைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை அல்லும், பகலும் அயராது சிந்தித்துக் கொண்டிருப்பது அதிமுக மட்டுமே. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதை போல, இந்த இயக்கம் நூறு ஆண்டுகளைக் கடந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றால், பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக ஆட்சிக்கு நாம் அனைவரும் முடிவுரை எழுதிட சபதமேற்போம்.

அதிமுக ஆண்டு: மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பதற்குத் தயாராகிவிட்டார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில், அதிமுகவை காக்கவும், கட்சியை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், நாம் அனைவரும் அயராது உழைப்போம். அதேபோல், 2026-ஆம் ஆண்டு அதிமுகவின் ஆண்டு என்பதையும் உறுதிப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிப்.26-இல் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.