ETV Bharat / state

சென்னையில் மாமூல் தர மறுத்த பாஸ்ட் புட் கடைக்காரரை தாக்கிய கும்பல்; ஒருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 6:41 PM IST

Shopkeeper Attacked for Mamool
மாமூல் தர மறுத்த கடைக்காரரைத் தாக்கிய கும்பல்

Shopkeeper attacked for mamool: சென்னை பெருங்களத்தூரில் புதியதாகத் திறந்த பாஸ்ட் புட் கடையில் மாமூல் தர மறுத்த கடைக்காரரை ஆறு பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் வேல் நகர் பகுதியில் வசித்து வருபவர் வினோத் (42). இவர் அதே பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாஸ்ட் புட் கடை ஒன்றைத் திறந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், வினோத்தின் அண்ணன் நெல்சன் (45) பகல் நேரத்தில் பெயிண்டிங் வேலை பார்த்து விட்டு, மாலை நேரத்தில் தம்பிக்குத் துணையாக பாஸ்ட் புட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பெருங்களத்தூர் தேவநேச நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (24) என்பவர், கஞ்சா போதையில் வந்து வினோத்திடம் என்னுடைய தலைவர்கள் விவேக் (37) மற்றும் அர்ஜுனன் (59) இருவரும் ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு உடனே வாங்கி வரச் சொன்னதாக வினோத்திடம் கூறியுள்ளார்.

அதற்கு மாமூல் எல்லாம் தர முடியாது என கூறிய உடனே ஐயப்பன், விவேக் மற்றும் அர்ஜுனிடம் சென்று மாமூல் தர மறுத்து விட்டதாகத் தெரிவித்ததும், இதைக் கேட்டு ஆத்திரமடைந்து ஆறு பேர் கொண்ட கும்பலுடன் பாஸ் புட் கடைக்குச் சென்று, ஒழுங்காகப் பணம் கொடுத்துவிடு, இல்லையென்றால் கடை நடத்த விட மாட்டோம் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், ஆறு பேர் கொண்ட அந்த கும்பல், வினோத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், சில நிமிடத்தில் அது கைகலப்பாக மாறியபோது, வினோத்தை மூன்று நபர்கள் சாலையில் இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கி ஐயப்பன், விவேக் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூன்று பேரும் கடைக்குள் காய்கறி வெட்டிக் கொண்டிருந்த நெல்சனை தகாத வார்த்தையில் திட்டியதோடு, கத்தி மற்றும் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கட்டையைக் கொண்டு சரமாரியாக நெல்சனைத் தலையில் தாக்கினர் என்று கூறப்படுகிறது.

உடனடியாக அங்கிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, பீர்க்கான்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் இருந்த நெல்சனை மீட்டு, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பிறகு பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்குச் சென்று, இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு நபர்களில் விவேக் என்பவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அர்ஜுனன் மற்றும் ஐயப்பன் உள்பட ஐந்து பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.