ETV Bharat / sports

பட்ஜெட் உரையில் எதிரொலித்த பிரக்ஞானந்தாவின் பெயர் - நிதி அமைச்சர் புகழாரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 7:41 PM IST

Updated : Feb 4, 2024, 6:34 PM IST

Praggnanandhaa
Praggnanandhaa

Nirmala sitaraman on Praggnanandhaa: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்ளிட்டோரால் விளையாட்டு துறையில் இந்தியா புது உத்வேகம் கண்டு உள்ளதாக கூறி புகழாரம் சூட்டினார்.

டெல்லி : நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. தொடர்ந்து 2024 - 25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மக்களவையில் நடந்த பட்ஜெட் உரையில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்குச் செல்வதைக் கண்டு நம்முடைய நாடு பெருமைகொள்வதாகவும், செஸ் விளையாட்டின் முதல் நிலை வீரரான பிரக்ஞானந்தா, 2023 ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு கடும் சவால் அளித்தார் என்றும் கூறினார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை 20 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்து உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். கடந்த ஆண்டு அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற பிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கடும் சவால் அளித்த பிரக்ஞானந்தா டை பிரேக்கர் சுற்றில் நூலிழையில் பதக்கத்தை நழுவ விட்டார். இருப்பினும், அந்த தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பிரக்ஞானந்தா இந்த ஆண்டு நடைபெற உள்ள பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெற்றார்.

மேலும் கடந்த ஆண்டு நடந்த ஆசிய மற்றும் ஆசிய பாரா விளையாட்டு திடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு வரலாற்று சாதனைகளை படைத்தனர். ஆசிய பாரா விளையாட்டு தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் 111 பதக்கங்கள் கைப்பற்றி இதுவரை இல்லாத அளவுக்கு புது வரலாறு படைத்தனர். அதேபோல் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என 107 பதக்கங்கள் வென்று வரலாறு படைத்தது.

இதையும் படிங்க : பட்ஜெட்டில் எதிரொலித்த முத்தலாக், 33% மகளிர் இடஒதுக்கீடு... தேர்தல் தொலைநோக்கா? மகளிர் நலன் கருதியா?

Last Updated :Feb 4, 2024, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.