ETV Bharat / sports

டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு! மும்பையின் பிளே ஆப் சுற்று கனவுக்கு இசையுமா கொல்கத்தா? - IPL 2024 MI vs KKR Match Highlights

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 7:08 PM IST

Etv Bharat
Etv Bharat(Photo Credits IANS)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.3) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 51வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில், 6ல் வெற்றியும், 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 3ல் வெற்றியும், 7ல் தோல்வியுடன் 6 புள்ளிகள் மட்டும் பெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் லக்னோ அணியிடம் தோற்றதை தொடர்ந்து மும்பை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறத்தாழ மங்கிப் போனது.

மும்பை இந்தியன்ஸ் அணி இனி வரும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு அதற்கு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டிலும் திடமாக இருந்தால் ஒருவேளை அடுத்த சுற்றுக்கு நுழைவதில் அதிர்ஷ்டம் அடிக்கலாம். மாறாக இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி முதல் அணியாக நடப்பு ஐபிஎல் சீசனை விட்டு வெளியேறும்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை - கொல்கத்தா அணிகள் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அதேநேரம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி ஏறத்தாழ பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக விளையாடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரிட் பும்ரா, நுவான் துஷாரா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆந்திரே ரஸ்செல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட் தரவரிசை: ஒருநாள், டி20 தொடர்ந்து இந்தியா முதலிடம்! ஆனா டெஸ்ட் கிரிக்கெட்ல..? - ICC Rankings

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.