ETV Bharat / health

சுட்டெரிக்கும் வெயில்.. பகல் நேரங்களில் வெளியில் செல்வோருக்கு சுகாதாரத்துறையின் அறிவுரைகள்! - how to protect heat stroke

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 11:10 AM IST

Public Health Notice on Heatstroke and Prevention for Summer
Public Health Notice on Heatstroke and Prevention for Summer

Heatstroke: கோடை கால வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்து வருகிறது. வெயில் காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. ஆகையால், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காகக் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என ஏற்கனவே பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுரை வழங்கியுள்ளது.

Public Health Notice on Heatstroke and Prevention
வெயிலிலிருந்து தப்பிக்க சுகாதாரத் துறை அறிவுரை

மேலும், வெயில் காலத்தில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்களும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் வெயில் தாக்கம் வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம்
ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுதும் வீட்டில் இருக்கும் பொழுதும் தேவையான அளவிற்கு குடிநீரைப் பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

வெயிலின் தாக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ள சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் விவசாயிகள், ஆன்லைன் மூலமாக உணவு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் விநியோகிப்பவர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர் மிகக் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகள் குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் ஆகியோரும் மிகக் கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரைப் பருக வேண்டும். அதிலும், ORS எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம். ஏனெனில் இத்திரவம் அதிகப்படியான வியர்வையினால் ஏற்படும் தாது உப்பு இழப்பினை சமன்படுத்த சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள அளவின்படி கொண்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல வாழ்வு மையங்கள் (துணை சுகாதார நிலையங்கள்). அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள, ORS கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட்டில் கோடை சுற்றுலா.. தமிழ்நாட்டில் இருந்து கப்பல் மார்க்கமாக எங்குச் செல்லலாம்.! - Sri Lanka Tourism By Cruises

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.