ETV Bharat / entertainment

விஜயின் இடத்தை நிரப்பும் முனைப்பில் சிவகார்த்திகேயன்? பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 3:30 PM IST

Sivakarthikeyan: நடிகர் விஜய், தற்போது அரசியலில் நுழைந்துள்ளதால் திரைத்துறையில் அவரது இடத்தை பிடிக்கும் எண்ணத்தில் சிவகார்த்திகேயன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது ஒவ்வொரு அசைவும் விஜய்யின் பாதையிலேயே இருப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் இவரும் ஒரு அரசியல் கட்சி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Sivakarthikeyan
Sivakarthikeyan

சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது பயணத்தைத் தொடங்கி, அடுத்த 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து, மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, தற்போது மாஸ் ஹீரோவாக மாறி இருப்பவர், நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமையுடன் தமிழ் சினிமாவில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். தனது நகைச்சுவை திறமையால் ஆரம்ப காலத்தில் காமெடி படங்களில் நடித்து, அதன் மூலம் வெற்றி நாயகனாக மாறினார். இவரது மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. அதன்பிறகு டாக்டர், டான் உள்ளிட்ட படங்கள் இவரை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றியது.

தற்போது, கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்தா நடிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இப்படம் வரும் 2024 தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், தனது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சமீபத்தில் சென்னையில் சந்தித்துள்ளார். மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு, சிவகார்த்திகேயனை சந்தித்து சென்றுள்ளனர்.

நடிகர் விஜய், தற்போது அரசியலில் நுழைந்துள்ளதால் திரைத்துறையில் அவரது இடத்தை பிடிக்கும் எண்ணத்தில் சிவகார்த்திகேயன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்… ஹீரோயினாக பிரபல நடிகை ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.