ETV Bharat / bharat

பெற்றோரின் கையால் மாணவிகளுக்குப் பட்டம் வழங்கச் செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா! கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 3:11 PM IST

Updated : Feb 27, 2024, 3:55 PM IST

கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி
பெற்றோரின் கையால் மாணவிகளுக்கு பட்டம் வழங்கச் செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

TRB Rajaa at convocation ceremony: மன்னார்குடியில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தங்களால் ஆளாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, தாங்களே பட்டம் வழங்கும்படி செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் செயலால் பெற்றோர்கள் மனம் நெகிழ்ந்தனர்.

திருவள்ளூர்: மன்னார்குடி கல்லூரி ஒன்றின் நேற்று (பிப்.26) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாணவிகளுக்கான டிகிரியை பெற்றோரின் கையில் கொடுத்து, அவர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கச் செய்து அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (பிப்.26) நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சி மாடையில் பேசிய அவர், "தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோர் செய்த தியாகங்களால்தான் நாம் இன்று உயர்ந்து நிற்கிறோம். இதுபோன்ற பட்டமளிப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினரை அழைப்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது.

என்னைப் பொறுத்தவரை, மாணவர்களுக்கு இந்தப் பட்டத்தை வழங்குவதற்கு இரண்டு பேருக்குத்தான் முழுத் தகுதியிருக்கிறது. எங்களின் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நாங்கள் சிறப்பு விருந்தினராக யாரையும் அழைப்பதில்லை. பெற்றோரின் கையால்தான் வழங்குவோம். அப்போது, ஏற்படும் உணர்வலைகளை விவரிக்க முடியாது.

ஏனென்றால், ஒரு பெண் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி, அதன்பிறகு கல்லூரிக்கு அனுப்புவது என்பது முந்தைய காலத்தில் சாதாரணமானதாக இல்லை. இந்தக் காலத்திலும்கூட, படிக்க இயலாமல் போன பெற்றோர்கள், வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உழைத்து, அந்தப் பணத்தைச் சிறிது சிறிதாகச் சேமித்து, பெண் பிள்ளைகளின் படிப்புக்காகச் செலவு செய்யும் அந்தப் பெற்றோரைத் தவிர வேறு யாரும் சிறப்பு விருந்தினராக இருப்பதற்கு முழுத் தகுதி கிடையாது.

மாணவிகளுக்கான டிகிரியை பெற்றோரின் கையில் கொடுத்து, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கச் செய்வதுதான் சிறப்பானதாக இருக்கும். இங்கே நம்முடைய மூன்று பிள்ளைகள் கோல்டு மெடல் அடித்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோரையாவது மேடையேற்றி, பிள்ளைகளுக்கு டிகிரியைக் கொடுக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னைக் கேட்டால், எல்லாப் பெற்றோரையும் மேடையேற்றி, அவர்களின் கையால் டிகிரியைக் கொடுக்கும்போது, அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை வணங்கி, ‘நன்றி அப்பா.. நன்றி அம்மா’ என்று சொல்வதைப் போன்ற பெருமையான தருணம் இருக்காது என்று நினைக்கிறேன். பெற்றோர்களின் சாதனைகளுக்கு ஒரு பெருமையாகவும், பிள்ளைகள் நன்றி சொல்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, புதிய பாலம் ஒன்றைக் கட்ட வேண்டிய பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுக்குப் புறப்பட வேண்டிய சூழலில் இருந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "எந்த நேரத்தில் என் அப்பா பாலம் கட்ட ஆரம்பித்தாரோ, நானும் பாலம் பாலமாகக் கட்டிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பள்ளிக்குக்கூட ஒரு பாலம் கட்டித் தந்திருக்கிறேன். இப்போதுதான் நமது மக்களுக்கான நீண்டகாலத் தீர்வாக நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர், மாணவிகளின் பெற்றோரை மேடையேற்றி அவர்களின் கைகளால் தங்கள் பிள்ளைகளுக்குப் பட்டங்களை வழங்கச் செய்தனர். தங்களால் ஆளாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, தாங்களே பட்டம் வழங்கும்படி செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் செயலால் பெற்றோர்கள் மனம் நெகிழ்ந்தனர்.

தங்களை ஆளாக்கிய பெற்றோரின் கையால், தாங்கள் படித்த கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலையில் பட்டம் பெற்ற மாணவிகள் தமது பெற்றோருக்கு வணக்கத்தைச் செலுத்தினர். இப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பெற்றோர்கள் உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வு பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

இதையும் படிங்க: “பாஜக எந்தக் கட்சியையும் உடைக்கவில்லை; பிற கட்சியினர் தாமாக ஆதரவு அளிக்கின்றனர்” - எல்.முருகன்

Last Updated :Feb 27, 2024, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.