மும்பை: பிப்ரவரி 29ஆம் தேதி முதல் வைப்பு தொகை மற்றும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்து இருந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களின் நலனுக்காக பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ள மார்ச் மாதம் 15 வரை ஆர்பிஐ அவகாசம் அளித்துள்ளது.
பேடிஎம் நிறுவனம் தொடர்சியாக விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்கள் காரணமாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது மத்திய ரிசர்வ் வங்கி தடை நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் கடந்த ஜனவரி மாதம் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 29க்கு பின் வாடிக்கையாளர் தங்களது வைப்பு தொகை நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பேடிஎம் பேமென்ட்ஸ்ஸை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தடை அவகாசத்தை மார்ச் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக ஆர்பிஐ இன்று தெரிவித்தது. இது தொடர்பாக ஆர்பிஐ கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் தானியங்கி 'பரிவர்த்தனையைச் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனையைப் பெறுதல்' வசதியின்கீழ் கூட்டாளர் வங்கிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, வாடிக்கையாளர் வைப்புகளை திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி உதவும்” என தெரிவித்துள்ளது.
முன்னதாக, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை காலியாகும் வரை பணம் எடுப்பது, உள்ளிட்ட எந்தவொரு பரிவர்த்தனைகளையும் கட்டுபாடு இன்றி மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பயனர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளின் (Frequently Asked Questions ) பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இதையும் படிங்க: ஹிந்தியில் பேசினால் தான் டிக்கெட்? கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பரிதவிக்கும் பயணிகள்..!