ETV Bharat / bharat

டெல்லியில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு.. நீர்வளத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

author img

By ANI

Published : Mar 10, 2024, 10:01 PM IST

Man Dies Falling into Borewell
Man Dies Falling into Borewell

Man Dies Falling into Borewell: டெல்லியில் கைவிடப்பட்டுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு ஆழ்துளைக் கிணறுகளையும் 48 மணி நேரத்திற்குள் வெல்டிங் மூலம் சீல் வைத்து மூடவேண்டும் என்று டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மர்லினா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி: டெல்லியில் உள்ள கேஷப்பூர் மண்டி பகுதியில் அமைந்துள்ள டெல்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருக்கும் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்ததாக நேற்று (மார்ச் 9) நள்ளிரவு 1 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே விழுந்த அந்த நபரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே விழுந்த நபரை 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, இன்று (மார்ச் 10) பிற்பகல் 3 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சடலமாக மீட்டனர்.

இந்த சூழலில் ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மர்லினா உத்தரவிட்டுள்ளார். மேலும், திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட 48 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது, "கேசோபூரில் ஆழ்துளைக் கிணற்றில் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் குறித்து, சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தேன். இங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் நீர் வாரியம் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றன. பூட்டிய அறையில் போர்வெல் இருந்துள்ளது. அந்த நபர் பூட்டை வலுக்கட்டாயமாக உடைத்து, உள்ளே நுழைய முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. அதை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க, டெல்லியில் கைவிடப்பட்டுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு ஆழ்துளைக் கிணறுகளையும் 48 மணி நேரத்திற்குள் வெல்டிங் மூலம் சீல் வைத்து மூடவேண்டும். அது குறித்த அறிக்கை என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜல் போர்டுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தனது 'X' வலைதளப் பக்கத்தில் டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மர்லினா பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்! என்ஐஏ வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.