தமிழ்நாடு

tamil nadu

அடிக்கடி முதுகு வலி ஏற்படுகிறதா? - என்ன காரணம் தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 6:58 PM IST

How To Cure Spine Problems in tamil: சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக முதுகு வலி உள்ளது. இந்த முதுகு வலி எதனால் ஏற்படுகிறது. இந்த வலி வராமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:எல்லா மனிதனும் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் முதுகு வலி பிரச்சினையால் அவதிப்பட்டிருப்பர். சில நேரங்களில் குறைவான வலி ஏற்படும், சில நேரங்களில் வலி அதிகமாகி விடும். 35 வயதுக்கு மேல் உள்ளவர்களே முதுகு வலியால் அதிக பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆண்களை விட பெண்களே முதுகுவலியால் அதிக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முதுகுவலி பிரச்சினைகள் எதனால் ஏற்படுகின்றன?, முகுது வலி வராமல் எப்படி தடுப்பது என்று இச்செய்தித் தொகுப்பில் காணலாம்.

முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்:உடலின் பின்புறம், கழுத்து, முதுகு, இடுப்பு என மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. முதுகெலும்பில் உள்ள ஒவ்வொரு எலும்புக்கும் இடையில் ஒரு மென்மையான வட்டு உள்ளது. எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும் போது அவை பிரிந்து செல்லாமல் இருப்பதற்கு இந்த வட்டு உதவுகிறது. முதுகில் அசைவு ஏற்படும் போது, இந்த வட்டுகள் சிறிது தேய்வது இயல்பு. அதே வேளையில் முதுகில் அதிக அசைவுகளை ஏற்படுத்தும் போது, வட்டுக்களில் அதிக தேய்மானம் ஏற்பட்டு, முதுகு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முதுகெலும்பு முறிவுகள், விபத்துக்களால் ஏற்படும் முதுகு தண்டில் ஏற்படும் காயங்கள், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது, அதிக உடல் எடை, எலும்புகளின் அடர்த்தி குறைதல், முதுகுப்பகுதியில் உள்ள எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடை வட்டு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் முதுகுவலி ஏற்படும். மன உளைச்சல் காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். மன அழுத்ததில் இருக்கும் போது, முதுகின் தசைகள் சுருங்கி இறுக்கமடையும். நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருக்கும் போது, தசைகளும் நீண்ட நேரம் இறுக்கமடையும். இதனால் முதுகு வலி ஏற்படும்.

மரபணு ரீதியாகவும் முதுகெலும்பு சம்பந்தப்பட்ட நோய்கல் ஏற்படும். மேலும் அடிக்கடி புகைப்படிப்பதாலும் முதுகுதண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அடிக்கடி புகைப்பிடிப்பதால் முதுகிற்கு இரத்த ஓட்டம் தடைபட்டு, முதுகிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. இதனால் முதுகெலும்பு பலவீனமாகி வலி ஏற்படுகிறது. கூன் போட்டு உட்காருவதும், நடப்பதும் முதுகு வலியை ஏற்படுத்துகின்றன. மேலும் ஸ்டைலாக நடப்பதும் முதுகுவலியை ஏற்படுத்தும்.

நமது முயற்சியாலே சரி செய்யலாம்: பெரும்பாலான முதுகுவலியை நமது சொந்த முயற்சியாலே குறைக்கலாம். முதுகு வலிக்கு ஓரிரு நாட்கள் நன்கு ஓய்வெடுத்தாலே போதுமானது. முதுகு வலியால் அவதிப்படுவர்கள், முதுகு தரையில் படும்படி படுக்க வேண்டும். இடுப்பின் கீழ் பகுதியில் ஒரு தலையணையையும், முழங்கால்களுக்கு கீழ் ஒரு தலையணையையும் வைத்து படுத்துக்கொள்ளலாம். மிகவும் மென்மையான மற்றும் கடினமான மெத்தைகள் முதுகு வலியை ஏற்படுத்தும்.

என்னெல்லாம் செய்யலாம்: ஆகையினால் நடுத்தரமான மெத்தைகளை பயன்படுத்தலாம். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எலும்பையும், தசைகளையும் வலுப்படுத்தும், கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைக்கரு, பால், சோயா, உளுந்து, கொண்டைக்கடலை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

எதையெல்லாம் செய்யக்கூடாது:பாஸ்பாரிக் அமிலம் கலந்த குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அலைபேசியை அதிக நேரம் உபயோகப்படுத்தக் கூடாது. ஹை ஹீல்ஸ் எனப்படும் உயரமான காலணிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை: கணினி மற்றும் லேப்டாப்புகளை உபயோகப்படுத்தும் போது நாற்காலியின் பின்புறம் 110 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். மானிட்டர் கண் மட்டத்தை விட 2 அல்லது 3 அங்குலங்கள் அதிகமாக இருக்க வேண்டும். விசைப்பலகை (Key Board) முழங்கையை விட சற்று தாழ்வாக இருக்க வேண்டும். அடிக்கடி எழுந்து நின்று உடலை நீட்ட வேண்டும். இதன் மூலம் முதுகு வலி ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இதையும் படிங்க:உடல் எடையை குறைக்க வேண்டுமா? மலச்சிக்கலா? அப்போ இதை கண்டிப்பா சாப்பிடுங்க!

ABOUT THE AUTHOR

...view details