தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா எளிதாக கிடைக்கிறது - சிவி சண்முகம் வேதனை!

By

Published : Dec 17, 2022, 4:48 PM IST

தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கஞ்சா கிடைக்கிறது எனவும், திராவிட மாடல் அரசு கஞ்சா அரசாக உள்ளது எனவும் எம்பி சிவி சண்முகம் கூறியுள்ளார்.

திராவிட மாடல் அரசு கஞ்சா அரசாக உள்ளது - சிவி சண்முகம் காட்டம்!
திராவிட மாடல் அரசு கஞ்சா அரசாக உள்ளது - சிவி சண்முகம் காட்டம்!

சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேச்சு

விழுப்புரம்: திமுக ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய சிவி சண்முகம், “மக்களைப் பற்றி சிந்திக்காமல் தன் குடும்பத்தினரை பற்றி மட்டும் சிந்தித்து கொண்டிருக்கும் திமுகவின் செயல்படாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

டீ ஆத்தும் வேலை: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை. மக்களை துன்பப்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது. தினந்தோறும் பொம்மைக்கு கீ கொடுப்பதுபோல் ஸ்டாலின் செயல்படுகிறார். தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் முதலமைச்சராக உள்ளார்.

ஆட்சி பொறுப்பேற்றபோது குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென தேர்தல் நேரத்தில் அறிவித்தார்கள். அதன் பின் அதனை பற்றி பேசவுமில்லை, நிறைவேற்றவும் இல்லை. கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேட்டால், பணம் எண்ணிக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கிறார்.

தமிழ்நாட்டில் 26 சதவீதம் கமிஷன் ஆட்சிதான் நடைபெறுகிறது. அமைச்சர்கள் யாரும் அமைச்சராக இருப்பதில்லை. புரோக்கராக மாறிவிட்டனர். கோட்டைக்குச் செல்லாமல் டீ ஆத்துகிற வேலையும், புரோக்கர் வேலையையும்தான் அமைச்சர்கள் பார்க்கின்றனர். விவசாயிகள், மக்களை பற்றி கவலையில்லாத அரசாக திமுக அரசு உள்ளது.

அனைத்திலும் விலை உயர்வு: இறப்பதற்கு முன்பு, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டுச் சென்றவர்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இறப்பதற்கு முன்பு கூட கடைசியாக தாலிக்கு தங்கம் திட்டத்தில் அரை பவுனை 1 பவுனாக கொடுத்தார். திமுக ஆட்சியில் சிமெண்ட் விலை மூட்டைக்கு 520 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஏனென்றால் திமுகவின் பினாமி குடும்பத்தினர் சிமெண்ட் கம்பெனியை நடத்துவதால்தான் விலை உயர்ந்துள்ளது. இதில் வரும் கமிஷன் நேரடியாக ஸ்டாலின் குடும்பத்துக்கு செல்கிறது. அரசு அலுவலர்களின் நிலைமை திமுக ஆட்சியில் ஒன்றியச் செயலாளர்களின் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.

வாக்களித்த மக்களை திமுக அரசு வஞ்சித்து கொண்டிருக்கிறது. வீட்டு வரி உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சொன்னது ஒன்று; செய்வது ஒன்றாக உள்ளது. மின்கட்டணம் உயர்வால் சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியையே நாங்கள் பார்த்தவர்கள்:விலைவாசி உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்த எந்த திட்டமும் திமுக அரசிடம் இல்லை. எதை பற்றியும் சிந்திக்காமல், நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கனவு உலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். ஜனநாயக நாட்டில் மன்னரைப்போல் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என ஆட்சி நடத்துகிறார்கள்.

இதுதான் திராவிட மாடலா? திமுக ஆட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ, எல்லா இடத்திலும் கஞ்சா கிடைக்கிறது. இது திராவிட மாடல் அரசு இல்லை, கஞ்சா அரசாக உள்ளது. கஞ்சா சென்று, அபின் அரசாககூட செயல்படும் நிலை ஏற்படும். திமுக அரசை குறை சொல்ல வேண்டும் என்று கூறவில்லை.

இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. பள்ளி வளாகங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. திமுக அரசில் பணம் இருந்தால் ரத்தத்தையும் உறியக் கூடிய அரசாக உள்ளது. காவல் துறையை வைத்துக் கொண்டு அதிமுகவை அடக்கி விடலாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நினைக்க வேண்டாம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையே நாங்கள் பார்த்தவர்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம். திமுக அரசுக்கு பாடம் புகட்ட நாடாளுமன்ற தேர்தல் அமைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிறைக்கு சென்றிருக்கிறாரா.? - உதயநிதியை விளாசிய சிவி சண்முகம்

ABOUT THE AUTHOR

...view details