தமிழ்நாடு

tamil nadu

கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு - தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

By

Published : May 12, 2022, 6:33 PM IST

கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு - தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடாக செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில், தென்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச்சார்ந்த மாணவ - மாணவியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக (போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரீ மெட்ரிக்) கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என பள்ளி மாணவ - மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகனை சந்தித்துப் புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவிற்கிணங்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா புகார் பெறப்பட்ட அப்பள்ளியினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் முடிவில் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காதது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

எனவே, பள்ளியின் தலைமையாசிரியை ஸ்ரீரங்கநாச்சியார் மீது உடனடி நடவடிக்கையாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை ஏதேனும் முறையாக வழங்கப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மாணவ, மாணவியர்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:முதலில் வார்னிங்…பின்புதான் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details