தமிழ்நாடு

tamil nadu

"ஆன்மிகத்தோடு கூடிய தமிழே.. தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

By

Published : May 8, 2023, 4:26 PM IST

ஆன்மிகத்தோடு கூடிய தமிழ் தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan

"ஆன்மிகத்தோடு கூடிய தமிழே.. தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

வேலூர் : ஆன்மிகத்தோடு கூடிய தமிழ் தான் தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்டம், திருமலைக்கோடி அடுத்த ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோயிலின் 31ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க 10 ஆயிரத்து 8 மஞ்சள் குடநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த விழாவில் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, "ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால், சிலர் ஆன்மிகத்தைத் தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறி வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர் மக்களுக்காக சேவை செய்கிறார்கள். சிலர் சேவையும் செய்வதில்லை. கரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு அந்த அளவிற்கு நாங்கள் முயற்சி செய்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, உலக சுகாதார நிறுவனம் தற்போதைய சுழலை கரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு நமது ஆன்மிகமும், அறிவியலும் தான் காரணமாகும்.

இந்தியா எடுத்த உறுதியான முடிவினால், 45 லட்சம் பேர் கரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இதற்கு தடுப்பூசி மட்டுமின்றி இறைவனின் அருளும் காரணமாகும். இவை இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காண முடியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆன்மிகமும் தமிழும் ஒன்று தான். ஆன்மிகத்தோடு கூடிய தமிழ் தான், தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும். தமிழக கலாசாரம் ஒரு ஆன்மிக கலாசாரமாகும். தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் இந்துக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில்லை. ஆனால், நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை எனக் கூறிக் கொள்கிறார். ஆனால், அவர் இந்துக்களுக்கு வாழ்த்துச் சொல்லாதது குறித்து நான் கேட்டேன். எனக்கும் பதில் கூறவில்லை. ஆளுநர்கள் குறித்து தவறான கருத்துகளைக் கூறுகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளன. அதே போல் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் சில அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளது.

ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏன் ஆளுநரைச் சந்தித்தார்கள். எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும். ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் கூறி வருகிறார். அதேபோல், நான் புதுச்சேரியில் அதிகநாட்கள் தங்கியிருப்பதாக நாராயணசாமி கூறுகிறார்.

உண்டியல் குலுக்கி புதுச்சேரிக்கும், ஐதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறார். அவர் உண்டியல் குலுக்கத் தேவையில்லை. சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மக்களும், ஐதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமான சேவையைத் துவக்கி வைத்தார்.

உங்களைப் போல, நாங்கள் தனி விமானத்தில் செல்லவில்லை. மக்களோடு மக்களாகத் தான் நாங்கள் செல்கிறோம். ஏற்கனவே புதுவைக்கும் ஐதராபாத்திற்கும் நேரடி விமான சேவை உள்ளது. இதைக் கூட தெரியாமல் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகிறார். புதுச்சேரியில் முதலமைச்சராக நாராயணசாமி இருந்த போது, அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்று எங்களுக்குத் தெரியும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே நாராயணசாமி ராஜ்யசபா எம்.பி. ஆக இருந்தார் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதனால் எல்லோரையும் குறை சொல்ல வேண்டாம்" என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க :நீட் தேர்வு மையத்தில் மாணவி உள்ளாடை அகற்றச் சென்னதாக எழுந்த விவகாரத்தில் திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details