வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சக்திநகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராணுவ வீரர்களான உயர்ந்தவன், அவரது சகோதரர் வீரன் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் குடும்பத்துடன் திருவிழாவுக்காக தங்களது சொந்த ஊருக்குச் சென்றிருந்ததாக தெரிகிறது. அதே குடியிருப்பில் வசித்து வந்த மதியழகன் என்பவரும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், இன்று(மே.3) காலை மதியழகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. அதேபோல், அருகிலிருந்த ராணுவ வீரர்களின் வீடுகளிலும் பூட்டை உடைத்து கொள்ளையடித்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மதியழகன் குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடியாத்தம் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மதியழகன் வீட்டில் பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது. அதேபோல் ராணுவ வீரர் உயர்ந்தவன் வீட்டில் ஒரு சவரன் நகை, பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
மற்றொரு ராணுவ வீரரான வீரன் வீட்டில் 12 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் திருடு போயிருந்தது தெரியவந்தது. குடியிருப்புக்கு அருகே உள்ள மகேஸ்வரி என்பவரது வீட்டிலும் 4 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து குடியாத்தம் நகரப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், வேலூர் தொரப்பாடி பகுதியில் மற்றொரு குற்றச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த கணேஷ் (31) என்பவர், மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் மார்க்கெட் தொடங்கப்போவதாகவும், அதில் பார்ட்னராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி, தனது குடும்ப நண்பரான அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த வனஜா என்ற பெண்ணிடம் 20 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் கணேஷ் சூப்பர் மார்க்கெட்டைத் தொடங்கவில்லை. அதனால், பணத்தை திரும்பத் தருமாறு வனஜா கேட்டுள்ளார். ஒவ்வொரு முறை பணம் கேட்கும்போதும், பல்வேறு காரணங்களைக் கூறி கணேஷ் இழுத்தடித்துள்ளார். இதையடுத்து, வனஜா வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 20 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குமரியில் அசால்டாக சைக்கிள் திருட்டு.. பலே இளைஞர் சிக்கியது எப்படி?