ETV Bharat / state

குமரியில் அசால்டாக சைக்கிள் திருட்டு.. பலே இளைஞர் சிக்கியது எப்படி?

author img

By

Published : May 3, 2023, 1:09 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சைக்கிளை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விலை உயர்ந்த சைக்கிளை திருடியவர் கைது.. குமரியில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்
விலை உயர்ந்த சைக்கிளை திருடியவர் கைது.. குமரியில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்

விலை உயர்ந்த சைக்கிளை திருடிய சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் முகமூடி கொள்ளை ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எனவே இது தொடர்பாக காவல் துறையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சாமியார் வேடம் அணிந்தும், குறி சொல்வதை போல வந்தும் வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. மேலும், சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் கேப் ரோட்டில் கோட்டார் காவல் நிலையம் அருகே உள்ள ஹோமியோபதி கிளினிக் மற்றும் பல் மருத்துவமனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

இந்த நிலையில், நாகர்கோவில் அருகே உள்ள புன்னை நகரில் ராஜீவ் என்பவர் தன் மகனுக்குக் கொடுப்பதற்காக 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புது சைக்கிள் ஒன்றை வாங்கி வைத்திருந்துள்ளார். பின்னர், வெளியூர் சென்றுள்ள தன் மகன் வந்து பயன்படுத்திக் கொள்வான் என்ற ஆசையில் தந்தை ராஜீவ், சைக்கிளை தன் வீட்டு சுற்றுச்சுவரின் உள்புறத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளார்.

ஆனால், மறுநாள் காலையில் பார்த்தபோது சைக்கிள் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து, ராஜீவ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சைக்கிள் கிடைக்கவில்லை. எனவே, இது குறித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் ராஜீவ் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

இதன் ஒரு பகுதியாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக வீட்டின் சுவர் ஏறி குதிக்கிறார். பின்னர் நிதானமாக சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சைக்கிளை திருடிச் சென்றது பழனியைச் சேர்ந்த அனீஸ் என்ற மணி (27) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அனீஸை கைது செய்த காவல் துறையினர், அவர் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அனீஸை சிறையில் அடைத்தனர். மேலும், இதில் சம்பந்தப்பட்ட விலை உயர்ந்த சைக்கிளை, அவரது மகன் இன்னும் பார்க்கவில்லை என்பதை அவரது தந்தை வருத்தமாக பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: பூட்டிய கடையை திறந்து பழம் தர மறுத்த வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.