திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கன்டோன்மென்ட் எஸ்பிஐ காலனியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் நவீன இரவு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை, கடந்த மார்ச் 15 அன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முன்னதாக இந்த விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என அவரது ஆதரவாளர்கள், அமைச்சர் கே.என்.நேரு வருகையின்போது கருப்புக் கொடி காண்பித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள், எம்.பி. திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து கார் கண்ணாடி, வீட்டுக் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அமர்வு நீதிமன்ற காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது அமைச்சரின் ஆதரவாளர்கள், காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து அவர்களைத் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து தாக்கிய 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர். இதனால் திமுகவில் உள்கட்சி பூசல் பூதாகரமாக நடைபெறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதேநேரம், காவல் நிலையத்தில் புகுந்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை காண்பிப்பதாக அதிமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினரும் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி. திருச்சி சிவாவை அவரது இல்லத்தில் வைத்து இன்று (மார்ச் 17) சந்தித்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “நான் சென்னையில் இருந்து வந்த பிறகு, எனக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. அது என்ன நிகழ்ச்சி, அவை எங்கே நடைபெறுகிறது என்பது கூட எனக்குத் தெரியாது. முழு விவரங்களையும் மாவட்ட ஆட்சியர்தான் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா காலனி உள்விளையாட்டு அரங்கை திறப்பதற்காக நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிலர், எம்.பி. திருச்சி சிவா பெயர் போடவில்லை என கருப்புக் கொடி காண்பித்தார்கள். அப்போது அது எனக்குத் தெரியாது எனவும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களைத்தான் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தேன்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும்போது, காவல் துறையினர் கருப்புக் கொடி காண்பித்தவர்களை கைது செய்ய பெரிய வேன் ஒன்றை சாலையில் நிறுத்திவிட்டார்கள். பின்பு சில நிமிடம் கழித்து, நான் மற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டேன். இந்த நிலையில் கட்சி குடும்ப வீட்டில் நடக்கக் கூடாத விஷயம் நடந்து விட்டது. என்னுடைய துரதிர்ஷ்டம் என்னவென்றால், நான் அந்த இடத்தில் இல்லை.