கார் கண்ணாடி உடைப்பு விவகாரம் - ''தனி நபரை விட கட்சி தான் முக்கியம் என நினைப்பவன் நான்'' - திருச்சி சிவா பேட்டி

author img

By

Published : Mar 16, 2023, 6:52 PM IST

Etv Bharat

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, ''தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரிது என்று எண்ணுபவன் நான்'' என கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்திற்குப் பதில் அளித்துள்ளார்.

திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு காரை மறைத்து கருப்புக்கொடி காட்ட முயன்றதாக திருச்சி சிவாவின் ஆதரவாளர் 10 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் இல்லத்தில் நின்றுகொண்டிருந்த கார் கண்ணாடியை, உடைத்தும் இருசக்கர வாகனத்தை உடைத்தும் தகராறில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணைக்காக இருந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை, காவல் நிலையத்திற்குள் புகுந்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட அமைச்சரின் ஆதரவாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இந்நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியபோது பெண் காவலர் சாந்தி கொடுத்தப்புகாரின் பேரில், திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் 60-வது வார்டு கவுன்சிலருமான காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளரும் 57-வது வார்டு கவுன்சிலருமான கிராப்பட்டி முத்து செல்வம், மாவட்டப் பொருளாளரும் அந்தநல்லூர் ஒன்றியத்தலைவருமான துரைராஜ், 55-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ், பொன்நகர் பகுதி பிரதிநிதி திருப்பதி உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே,வெளிநாடு சென்றிருந்த திருச்சி எம்.பி. சிவா விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக கன்டோன்மென்ட் பகுதியில் எஸ்.பி.ஐ காலனியில் அவரது இல்லத்திற்கு வந்து உடைக்கப்பட்ட கார் கண்ணாடி, இருசக்கர வாகனங்கள் என பார்வையிட்ட பிறகு அவரது ஆதரவாளர்களிடம் என்ன நடந்தது என கேட்டு தெரிந்து கொண்டார்‌.

பின், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரைன் சென்றிருந்தேன். நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.

இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை; கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான திமுக-காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரிது என்று எண்ணுபவன் நான்.

இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாதபோது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மனச்சோர்வில் உள்ளேன். மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை” என்றார்.

இதையும் படிங்க: ''நீ கொஞ்சம் வாயை மூடு'' மீண்டும் சர்ச்சையில் சிக்கிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.