தமிழ்நாடு

tamil nadu

சட்டவிரோத மது விற்பனை செய்த 52 டாஸ்மாக் பார்கள் மீது நடவடிக்கை - திருச்சி மாநகர ஆணையர் எச்சரிக்கை!

By

Published : May 22, 2023, 6:58 PM IST

சட்டவிரோத மது விற்பனை செய்த 52 டாஸ்மாக் பார்கள் மீது நடவடிக்கை- திருச்சி மாநகர ஆணையர் எச்சரிக்கை!

கள்ளச்சாராயத்தை தடுக்க 24 மணி நேரமும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக, கள்ளச் சந்தையில் மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத மது விற்பனை செய்த 52 டாஸ்மாக் பார்கள் மீது நடவடிக்கை- திருச்சி மாநகர ஆணையர் எச்சரிக்கை!

திருச்சி: திருச்சி மாநகர காவல்துறை சார்பில், திருச்சி மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில், ரோந்து வாகனங்களில் ரோந்து செல்லும் காவல் துறையினருக்கு 'பாக்கெட் கேமரா' வழங்கும் நிகழ்வு இன்று (மே 22) நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாநகர காவல்துறை ஆணையர் சத்ய பிரியா பங்கேற்று, 54 போலீசாருக்கு 'பாக்கெட் கேமராக்கள்’ வழங்கி, ரோந்து செல்ல இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில்,“தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள பாக்கெட் கேமராக்கள், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்குச் சென்று அவர்கள் விசாரிக்கும் போது, விசாரணை முழுவதும் கேமராவில் பதிவாகிவிடும்.

விசாரணைக்கு அந்தப் பதிவுகள் நல்ல பயனை அளிக்கும். இதன் மூலம் வழக்கு தொடர்பான உண்மை தன்மைகளை துல்லியமான முறையில் அறிந்து கொள்ள முடியும். மேலும், இந்த கேமராக்களின் மூலம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக காட்சிகளைப் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த பாக்கெட் கேமரா 64 ஜி.பி மெமரி திறன் கொண்டது” என்று கூறினார்.

இதையும் படிங்க:இப்ப நான் தான் டிராபிக் போலீஸ்..! நடுரோட்டில் போதை ஆசாமி ரகளை

மேலும், ’’இந்த பாக்கெட் கேமராவில் அவ்வப்போது பேக்கப் (back up) எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. குறைந்த பட்சம், 5 மற்றும் 10 மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக கேமராவில் பதிவு செய்து கொள்ளலாம். திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மதுபானக் கடைகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீதும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீதும் இதுவரை 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எந்தப் புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் இதுவரை எதுவும் கிடையாது. அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக மதுபானக் கடை, பார்கள் செயல்பட்டால், உடனடியாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்க வேண்டும்.

கள்ளச் சாராயத்தைத் தடுக்க, 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:தஞ்சை கள்ள மது விவகாரம்.. 2 பேர் கைது, 4 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details