தமிழ்நாடு

tamil nadu

வாலிபால் போட்டியை வேடிக்கை பார்த்த நபரை கஞ்சா போதையில் கொலை செய்த இளைஞர்கள் கைது!

By

Published : Aug 4, 2023, 10:40 AM IST

ஜோலார்பேட்டை பகுதியில் வாலிபால் விளையாட்டை வேடிக்கை பார்க்க வந்த நபரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jolarpet
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த கடைத்தெரு பகுதியில் உள்ள சிறு விளையாட்டு மைதானத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் ஜோலார்பேட்டை சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் மாலை நேரத்தில் வாலிபர்கள் வாலிபால் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் கடைத்தெரு இளைஞர்களும், வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த சிண்டு என்கிற மௌரி(20) மற்றும் டேவிட்(21), அப்பு மற்றும் பிரவீன் ஆகியோர் தலைக்கு மீறிய கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது அவ்வழியாகச் செல்வோரைக் கஞ்சா போதையிலிருந்த இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்தது மட்டுமின்றி அவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபாலகிருஷ்ணன்(50) என்ற நபர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவர் தினமும் மாலை நேரத்தில் டீ அருந்திவிட்டு சிறிது நேரம் வாலிபால் விளையாட்டைப் பார்த்து செல்வது வழக்கம். அதேபோல நேற்றும் அந்த வழியாக வந்த போது கஞ்சா போதையிலிருந்த நால்வரும் கோபாலகிருஷணனைப் பார்த்து நீ ஏன் தினமும் இந்த பக்கம் வருகிறாய், உனக்கு என்ன வேலை என மீண்டும் வம்பிழுத்துள்ளனர்.

இதனால் சிரித்தவாறு கோபாலகிருஷ்ணன் சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் கோபமடைந்த அந்த நான்கு பெரும் நாங்கள் என்ன கேட்கிறோம், நீ ஏன் சிரிக்கிறாய் எனக்கூறி தாங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து கோபாலகிருஷணன் முகத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதனால் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த கோபாலகிருஷணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார்.

அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தகவல் தெரிவித்து கோபாலகிருஷ்ணன் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்போது இந்த கொலை சம்பவம் தொடர்பாக டேவிட்(20) மற்றும் சிண்டு(20) என்கிற மௌரி இருவரையும் கைது செய்த ஜோலார்பேட்டை காவல்துறையினர், தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை இல்லை எனத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கூறிவரும் நிலையில், ஜோலார்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் இதுபோல் சம்பவம் நடந்தேறி வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு டீ கப் பயன்படுத்திய விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details