திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் தமிழருவி என்பவர் இனிப்பகம் நடத்தி வருகிறார். கடந்த 30 ஆம் தேதி இரவு 11 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் தீ வைத்து கடைக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணை காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசித் தேடிவந்தனர். இதனிடையே, வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள உடைந்த பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முஹம்மத் வசீம் மற்றும் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த நர்மதன் என்பது தெரியவந்தது. மேலும், பேருந்து நிலையம் அருகில் உள்ள கருணா இனிப்பகத்தில் இவ்விருவரும் கடந்த 30ஆம் தேதி இரவு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீப்பற்ற வைத்து வீசிவிட்டு சென்றவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.