தூத்துக்குடி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் 58.67 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பேருந்து நிலையம், 28.87 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) தொடர்பான பூங்கா உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில், "அண்ணா பேருந்து நிலையத்தை கொண்டுவர அமைச்சர், மேயர், ஆட்சியர், எம்.பி.யான நான் (கனிமொழி) ஆகியோர் முன்னெடுத்து சிறப்பாக, விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று பாடுபட்டோம்.
ஆனால் பேருந்து நிலையத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். எது எடுத்தாலும் அரசியலைக் கொண்டு வந்து தேவையில்லாத விஷயங்களைப் புகுத்தி நாங்கள் இருக்கிறோம், நாங்க தான், நாங்க தான் என்று சொல்லக்கூடிய சில பேர் இந்த நாட்டிலே இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
எங்கே பிரச்சினை உருவாக்கலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எதுவுமே இங்கே இருக்கக் கூடிய ஒன்றிய அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தம் என்பது கிடையாது. எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் முழுவதுமாக நீங்கள் கொண்டு வருவது கிடையாது. அதில், மாநில அரசினுடைய பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கிறது.
ஒரு இடத்தில் கட்டிடம் கட்டப்படுகிறது என்றால் அந்த இடம் மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான இடம். அந்த கட்டடம் கட்டுவதற்கு நிதி நீங்கள் அளிக்கிறீர்கள். ஆனால் முழுவதும் கொடுக்கப்படுவதில்லை. எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து விட்டு தான் நிதி அளிக்கிறீர்கள். நீங்கள் கொடுக்கின்ற ஐம்பது சதவீதம் எங்கள் வரிப்பணம், ஜிஎஸ்டி என்று அனைத்தையும் வாங்கிக் கொள்கிறீர்கள். திருப்பி எதுவும் கொடுப்பது கிடையாது. பிரதமர் மோடி திட்டத்தில் வீடு கட்டி தருகின்றனர். மோடி வீடு என்று கூறுகின்றனர்.
ஆனால் உண்மையிலேயே அது முதலமைச்சர் வீடு தான். இடம் கொடுப்பது மாநில அரசு அந்த திட்டத்திலே வரக்கூடிய பணத்தில் அதிகபட்சம் பணத்தை தருவது தமிழக அரசு, மத்திய அரசு கொடுப்பது ரூ.72 ஆயிரம் மட்டுமே. மீதி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது.
ஆனால் பெயர் மட்டும் பிரதமர் வீடு என்று வைத்து விடுவார்கள். அது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். பெயரை மாற்றி தன் பெயரை வைத்துக்கொண்டு அதில் அரசியல் நடத்திவிடலாம் என்று இருக்கிறார்கள். தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள் உண்மையை தெரிந்தவர்கள் நிச்சயம் எந்த மாற்றமும் இங்கே வராது. மேலும், இங்கே இருக்கக்கூடிய எந்த குளத்திலும் தாமரை மலராது" என்றார்.
பேருந்து நிலைய வளாகத்தில் திறப்பு விழா பணிகள் நடந்து வந்தது. அப்போது, ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டினர். இதனையடுத்து சில மணி நேரங்களிலேயே பாஜகவினரால் ஒட்டப்பட்ட பிரதமர் மோடியின் படத்தை திமுகவினர் கிழித்து எறிந்தனர். இதனை மையமாக வைத்தே விழாவில் அமைச்சர்கள், எம்.பி ஆகியோர் சுட்டி காட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வோம்" - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்!